இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு.குவிகிறது அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அட்மிஷன் சூடு பிடிக்கும்

         தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 90 ஆயிரம் இடங்கள் காலியாகி, இன்ஜி., படிப்புக்கு மவுசு குறைந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஏராளமான இன்ஜி., மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால் நிலைமை மாறி உள்ளது. இதன் மூலம், வரும் கல்வி ஆண்டில் இன்ஜி., படிப்புகளுக்கு மீண்டும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பிலுள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - -பி.டெக்., படிப்புகளுக்கான பொது கவுன்சிலிங் கில், நடப்பு கல்வி ஆண்டில், ஒரு லட்சத்து, 1,620 இடங்கள் நிரம்பின; 91 ஆயிரம் இடங்கள் காலியாகின.அதனால், பல தனியார் இன்ஜி., கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்தன. பல கல்லுாரிகள் புதிய பாடப்பிரிவை துவங்கும் முடிவை கை விட்டன. குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பாடப்பிரிவுகளை மூடவும், கலை கல்லுாரிகளாக மாற்றவும் முடிவெடுத்தன.


மவுசுஇந்நிலையில், இன்ஜி., படிப்புகளுக்கு மீண்டும் மவுசு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது, இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தர, ஏராளமான நிறுவனங்கள் முன் வந்து, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் வளாக நேர்காணல் நடத்துகின்றன.'டி.சி.எஸ்., காக்னிசன்ட், இன்போசிஸ், மைக்ரோசாப்ட், டெக் மகேந்திரா' உள்ளிட்ட பல ஐ.டி., நிறுவனங்களுடன், 'கோர்' நிறுவனங்கள் என்று அழைக்கப்படும், 'எல் அண்டு டி., 
ரெனோ நிசான், பவர்கிரிட் கார்ப்பரேஷன், ஹுண்டாய், என்.எல்.சி.,' உள்ளிட்ட பல துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அள்ளி தருகின்றன. அண்ணா பல்கலையில் உள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, எம்.ஐ.டி., கல்லுாரி ஏ.சி.டெக்., திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கல்லுாரி போன்றவற்றில், இதுவரை நடந்த, இரண்டு வகை வளாக நேர்காணலில், இறுதி ஆண்டு படிக்கும், 1,500 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். 
எஸ்.ஆர்.எம்., பல்கலை, வி.ஐ.டி., பல்கலை மற்றும் அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, சென்னை மற்றும் புறநகரிலுள்ள தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, வளாக நேர்காணலில் பணி வாய்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதுவரை, 25 ஆயிரம் பேர் 
பணி ஆணை பெற்றுள்ளனர். சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு பின், தமிழகத்திலுள்ள பல பெரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தியதால், கூடுதலாக ஆட்கள் எடுப்பதாக, இன்ஜி., கல்லுாரியினர் தெரிவித்தனர். புதிதாக துவங்கப்படும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களும், அதிக அளவு பணி வாய்ப்பு அளித்துள்ளன.
வாய்ப்புஇந்த எழுச்சியால், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர், தற்போதே இன்ஜி., கல்லுாரிகளின் கல்வித்திறன், கட்டமைப்பு, ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் வேலை வாய்ப்பு அளிப்பு போன்றவற்றை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளனர். தரமான கல்லுாரிகளை பெற்றோர்களும், மாணவர்களும் தேர்வு செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். கல்லுாரிகளுக்குச் நேரில் சென்று கல்லுாரிகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அங்கு படிக்கும் மாணவர்களிடமும் பேசி தகவல்களை திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 


'மேக் இன் இண்டியா'

இந்தியாவிலேயே எல்லா பொருட்களையும் தயாரிக்க வேண்டும் என்ற, 'மேக் இன் இண்டியா' என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த திட்டப்படி, பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை, இந்தியாவிலேயே துவக்க முன் வந்துள்ளன. சாலை, மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் அரசு அதிக அளவில் முதலீடுகளை செய்ய துவங்கி உள்ளன. இந்த பணிகளுக்கு ஏராளமான வேலையாட்கள் தேவை. கலைகல்லுாரிகளில் படித்த மாணவர்களால், அந்த பணிகளில் ஈடுபட முடியாது. எனவே, தரமான இன்ஜி., கல்லுாரிகளில் படிப்பை முடித்து விட்டு, வெளியே வரும் மாணவர்களுக்கு, அடுத்த சில ஆண்டுகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன. 
வரும் ஆண்டுகளில் இன்ஜி., கல்லுாரிகளில் மீண்டும் சேர்க்கை சூடுபிடிக்க துவங்கும். 


மூன்றாம் கட்ட நேர்காணல்

அண்ணா பல்கலையில், மூன்று வித, வளாக நேர்காணல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, 'ட்ரீம் ஜாப்' எனப்படும், பெரிய ஐ.டி., நிறுவனங்களில் ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் முதல், 22 லட்சம் ரூபாய் வரையான சம்பளத்துக்கு, நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. 
இரண்டாம் கட்டமாக, ஐ.டி., சார்ந்த நிறுவனங்களில், ஆண்டுக்கு அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் சம்பளத்தில், 1,250 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக, நவ., 30ல் வளாக நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு முடிந்ததும், ஜனவரியில், அனைத்து அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், 250 நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive