NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நூற்றாண்டு கண்ட ஐன்ஸ்டினின் சமன்பாடு!

      நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டின் முன்வைத்த உலகப் பிரபலமான, 'பொது சார்பியல் கொள்கை', இந்த வாரம் நுாற்றாண்டு காண்கிறது. நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய இதே நவம்பர் இறுதி வாரத்தில் ஒரு நாள், ஐரோப்பாவே போரின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில், இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின், தன், பொது சார்பியல் கொள்கையை விளக்கும் அந்த சமன்பாட்டை எழுதினார்.


'தியரி ஆப் ஜெனரல் ரிலேட்டிவிட்டி' என்ற அந்த கொள்கை, நாம் இந்த வெளி, காலம், பருப்பொருள் மற்றும் பேரண்டம் ஆகியவற்றை பார்க்கும் விதத்தையும், சிந்திக்கும் விதத்தையும் அடியோடு மாற்றிவிட்டது. மனித குலத்தைப் பற்றியும், பூமியைப் பற்றியும், இந்த பேரண்டத்தில் அதன் இடம் பற்றியும் நாம் சிந்திக்கும் விதத்தை, அவரது கொள்கை புரட்டிப்போட்டது.பெருவெடிப்பு (Big Bang), கருந்துளைகள் (Black Holes), காலவெளிக் குழிவு (Warped spacetime), பரவெளிகள் (Wormholes), கால இயந்திரங்கள் (Timemachines), அவ்வளவு ஏன் நாம் பயன்படுத்தும் ஜி.பி.எஸ்., (GPS) சாதனங்கள் என்று எல்லாமே ஐன்ஸ்டினின் அற்புதமான சார்பியல் கொள்கையை சார்ந்தே இயங்குகின்றன. 

சிந்திக்க ஆரம்பித்தால்...:

தனக்கு முன்பு இருந்த விஞ்ஞானிகளின் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்தை முன்வைத்தார் ஐன்ஸ்டின். காலம் வேறு, வெளி வேறு அல்ல என்றும், இரண்டுமே ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை தான் என்றும் தன் சமன்பாடுகள் மூலம் ஆணித்தரமாக சொன்னார் ஐன்ஸ்டின்.காலமும் வெளியும் நமது வாழ்க்கையையே நடத்தினாலும், நாம் அவற்றின் இயல்புகளை சிந்திக்க ஆரம்பித்தால் குழம்பி விடுகிறோம். ஏனெனில், காலம் மற்றும் வெளியின் ஊடாக, நம் வாழ்க்கை பயணித்தாலும், நம்மால் அவற்றை பார்க்க முடிவதில்லை. 
ஆனால், ஐன்ஸ்டின் அவற்றை தன் கொள்கையின் அடிப்படையிலான, 'சிந்தனைச் சோதனைகள்' மூலமாகவும், கணித சமன்பாடுகளின் ஆதாரத்தோடும் இயற்பியல் உலகினருக்கு விளக்கினார்.

புவி ஈர்ப்பு விசையை அடையாளம் கண்டு சொன்ன ஐசக் நியூட்டனின் காலத்திலிருந்தே, காலம் என்பது ஒரு நதி போல, சீரான வேகத்தில், பேரண்டவெளியில் ஓடிக் கொண்டிருக்கக் கூடியது என்று தான் விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் ஐன்ஸ்டினோ, காலமும் வெளியும் பிரிக்கவே முடியாதவை என்றும், நான்கு பரிமாணங்களைக் கொண்ட ஒரு பருப்பொருளைத் தான் நாம் காலவெளியாக அனுபவிக்கிறோம் என்றும் நிரூபித்தார். அதுமட்டுமல்ல; 'காலவெளி என்பது வெற்றிடமோ, ஏதுமில்லாததோ அல்ல; அது ஒரு பருப்பொருள்' என்று அழுத்தமாக அவர் நிரூபித்தார். 

அதேபோல, காலவெளி அசையாத ஜடப்பொருள் அல்ல என்றும், இந்த பேரண்டத்தில் இயங்கும் தன்மையுள்ள ஒன்று என்றும் அவர் விளக்கினார்.ஐன்ஸ்டினின் கொள்கைப்படி நாம் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பினால், பூமியில் இருப்பவரை விட, அவருக்கு வயதாகும் வேகம் மாறுபடும்! காலம் எப்படி செல்கிறது என்பது, ஒருவர் ஒரு பெரும் பருப்பொருளுக்கு எத்தனை அருகாமையில் இருக்கிறார் என்பதைப் பொருத்து மாறுபடும் என்பது, ஐன்ஸ்டினின் வாதம். 
இதன்படி, நீங்கள் தரைத் தளத்திலும், உங்கள் நண்பர், 150வது மாடியிலும் இருக்கிறார் என்றால், உங்கள் இருவருக்கும் காலத்தின் போக்கு சற்று மாறுபடும். 

இயற்பியல் மற்றும் விண்வெளித் துறையினருக்கு பேரண்டத்தை துல்லியமாக புரிந்து கொள்வதில் இந்தக் கருத்து மிகவும் உதவிகரமானதாக கருதப்படுகிறது. பொது சார்பியல் கொள்கை விளக்கும் தன்மைகள் பேரண்டத்தில் இல்லாவிட்டால், நாமெல்லோரும் திக்குத் தெரியாமல் அலைய வேண்டியிருக்கும்.இன்று மொபைல்பேசி உட்பட பல சாதனங்களில், 'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்' என்று அழைக்கப்படும், 'ஜி.பி.எஸ்.,' தொழில்நுட்பம் இருக்கிறது. இது பூமியில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை, துல்லியமாக வரைபடத்தில் குறித்துக் காட்டக் கூடியது. 
வேகத்தில் வித்தியாசம்:

இது துல்லியமாக இயங்க, பொது சார்பியல் கொள்கை அவசியம். அது துல்லியமாக இயங்குவதற்கு முக்கிய காரணம், கால இடைவெளியை அது கணக்கிலெடுத்துக் கொள்வது தான்.
பூமியிலிருக்கும் நமக்கு, விண்வெளியில் பல நுாறு கி.மீ., உயரத்திலிருக்கும் செயற்கைக்கோள்கள் சமிக்ஞைகளை அனுப்புவதும் பெறுவதுமாக இருக்கின்றன. நமக்கும், செயற்கைக்கோளுக்கும் காலம் போகும் வேகத்தில் வித்தியாசம் இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளா விட்டால், ஜி.பி.எஸ்.,சின் துல்லியம் போய்விடும். எந்த அளவுக்கு துல்லியம் கெடும் தெரியுமா! நாள் ஒன்றுக்கு, 45 மைக்ரோ வினாடிகள்! இது பெரிய வித்தியாசமில்லை என்று பலர் நினைக்கலாம். ஆனால், ஜி.பி.எஸ்., சமிக்ஞை அனுப்பிய பின், ஒரு வாரம் கழித்து செயற்கைக்கோளிலிருந்து பதில் சமிக்ஞை வருவதாக வைத்துக் கொள்வோம். 
நிரூபணம்:

அப்போது, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து, 5,000 மீட்டர் தள்ளியிருப்பதாக தான், உங்கள் ஜி.பி.எஸ்., சாதனம் காட்டும்! தன் கொள்கை மிகச் சரியானது என்று, அது சோதிக்கப்படுவதற்கு முன்பே முழுமையாக நம்பினார் ஐன்ஸ்டின். நாள்பட அவரது கொள்கை துல்லியமானது என்பது நிரூபணமாகி வருகிறது.நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள், பிற கிரகங்களை கடந்து பூமிக்கு வருகையில் சற்றே வளைந்தே வருகின்றன. அதிக ஈர்ப்பு சக்தி உள்ள இடங்களில் காலம் மெதுவாகவே போகிறது. ஐன்ஸ்டினின் இதுபோன்ற நிரூபணங்கள், அவர் காலத்தை வென்ற மேதை என்பதையே காட்டுகின்றன.
தனது கொள்கை முழுமையானதல்ல என்பதை ஐன்ஸ்டினே ஒப்புக்கொள்வார். உலகமே அந்த கொள்கையின் நுாற்றாண்டினை கொண்டாடும் இந்த வேளையில், அவரது கொள்கைகள் குறித்த பல கேள்வி களுக்கு இன்னும் பதில்கள் இல்லை. அவர் உயிரோடிருந்தால், அந்த கேள்விகளுக்கு விடை காண்பதில் இந்நேரம் மெய்மறந்திருப்பார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive