மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் கண்டுபிடிப்பு: வீடுவீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

          தமிழக வாக்காளர் பட்டியலில் 3.75 லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அலுவலர்களைக் கொண்டு வீடுவீடாக சரிபார்க்கும் பணியை தேர்தல் துறை தொடங்கியுள்ளது.தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் முடிந்துள்ளது.
 
       அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில், 5.82 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள் பெயர், இரட்டைப்பதிவுகள் அதிகளவில் இருப்பதாக புகார் தெரிவித்தன.

தேர்தல் ஆணையத்துக்கும், தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடமும் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் பதிவு எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்ததால், புதிய வாக்காளர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்காக வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதனால், 3.70 லட்சத்துக்கும் மேற்பட்ட இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. தொடர்ந்து, மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த அடுத்த மாதத்தில் இருந்து வழக்கமாக புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல், மாநில தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. சட்டப்பேரவை தேர்தல் போல், வாக்காளர் பட்டியல் தொடர்பான குழப்பம் இதிலும் வந்துவிடக் கூடாது என்பதால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகாரி தகவல்

இது தொடர்பாக, தேர்தல் துறை அதிகாரி ஒருவர் ‘ தி இந்து’விடம் கூறியதாவது:தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் 3.75லட்சம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பட்டியல், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி அலுவலர்கள், இந்த பட்டியலில் உள்ள பெயர்களை மீண்டும் வீடுவீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் எந்தஇடத்தில் தற்போது இருக்கிறார் என்பதை உறுதி செய்து, மற்றொரு இடத்தில் இருக்கும் பெயர் அவரது அனுமதியுடன் நீக்கப்படும். தொடர்ந்து இந்த பணிகள் நடக்கும். புதிய வாக்காளர்கள் வழக்கம் போல், இணையதளத்தில் தங்கள் பெயர்களை சேர்க்கலாம். அதுபோல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை தொடர்ந்து நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this