பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயம்.

          பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில், “யோகா என்பது மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சியாகும். 
 
           மேலும் யோகாப் பயிற்சி, பள்ளி மாணவர்களின் விளையாட்டு செயல்பாடுகளின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாகவும் உள்ளது. பள்ளிகளில் மதிய உணவுஇடைவேளைக்கு முன்னர் இப்பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டு துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில், “விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகியவற்றுக்கு தமிழக அரசு பெரிய அளவில் உத்வேகம் அளித்து வருகிறது. பல்வேறு புதுமைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. துறையின் நிதி ஒதுக்கீடு இதுவரை இல்லாத அளவுக்கு 2016-2017-ம் ஆண்டில் ரூ.153 கோடியே 38 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டில் ரூ.104 கோடியே 77 லட்சம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும், ரூ.41 கோடியே 58 லட்சம் தேசிய மாணவர் படைக்கும் மற்றும் ரூ.5 கோடியே 47 லட்சம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் நலத்திட்டங்கள் தொடர நிதி ஒதுக்கீடு

பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில், “2016-2017-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க ரூ.1,080 கோடியும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.381 கோடியும், 4 ஜோடி சீருடைகள் வழங்க ரூ.409 கோடியே30 லட்சமும், மலைப் பகுதிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச் சட்டை வழங்க ரூ.3 கோடியே 71 லட்சமும், பாடப்புத்தகங்கள் வழங்கரூ.264 கோடியே 35 லட்சமும், நோட்டுப் புத்தகம் வழங்க ரூ.107 கோடியே 20 லட்சமும், விலையில்லா புத்தகப்பை வழங்க ரூ.115 கோடியே 11 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Share this