NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக வாழ சிட்டுக்குருவிகள் மிக அவசியம்

          ஒவ்வொரு வீட்டிலும் அழையா விருந்தாளியாகவும், வாடகை தராத வாடகைதாரராகவும், ஒரு காலத்தில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன.
 
           ஓடு வீடுகளிலும், குடிசை வீடுகளிலும், உத்திரம் உள்ள வீடுகளிலும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்ந்தன. வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டினால், அந்த வீடுகளில் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும், மக்கள் மத்தியில் உண்டு. சிட்டுக்குருவிகளின் அழகில் மயங்கி சிறுவர், சிறுமிகள் அவற்றை செல்லமாக வளர்த்தனர்.


1980–களில் செழிப்புடன், பரவலாக அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் இனம் காலப்போக்கில் அழிய தொடங்கின. இதற்கு முதல் காரணம் உணவு தட்டுப்பாடு தான். விவசாய பயிர்களிலும், செடிகளிலும் உள்ள புழுக்களும் மற்றும் தானியங்களும், பூச்சிகளும் சிட்டுக்குருவிகளுக்கு முக்கிய உணவாக இருந்தன. 1990–களில் விவசாயத்தில் இயற்கை உரங்களுக்கு பதில், ரசாயன உரங்கள் பயன்படுத்த தொடங்கினர். இதனால் பயிர்கள், செடிகளில் இருந்த பூச்சிகளும், புழுக்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதுதான் சிட்டுக்குருவிகளுக்கு வந்த முதல் ஆபத்து ஆகும்.
விழிப்புணர்வு
குடிசை, ஓடு வீடுகள் இடிக்கப்பட்டு, காற்றோட்டம் குறைவாக உள்ள ‘கான்கிரீட்’ வீடுகள் கட்டப்பட்டன. ஆண்டாண்டு காலமாக மனிதனுடன் வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகளுக்கு, இதுபோன்ற வீடுகளுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இது குருவிகளுக்கு வந்த இரண்டாவது ஆபத்தாகும். ஏற்கனவே இரையின்றி தவித்த சிட்டுக்குருவிகளுக்கு இருப்பிடமும் பறிபோனது. இதுமட்டுமல்ல வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, மூலை முடுக்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஆகியவை சிட்டுக்குருவி இனங்களின் பெரும்பகுதியை அழித்து விட்டது.
எஞ்சியிருக்கும் குருவிகளையாவது காக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர் முகமது திலாவார் முதலில் குரல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘அவான்’ போன்ற அமைப்புகள் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க களம் இறங்கின. இந்த அமைப்புகள் மார்ச் 20–ந்தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்து, கடந்த 2010–ம் ஆண்டு முதல் சிட்டுக்குருவிகளை பற்றியும், அவற்றின் நன்மை குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரே பறவை
இதன் தொடர்ச்சியாக, சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, டெல்லி முன்னாள் முதல்–மந்திரி ஷீலா தீட்சித், டெல்லி மாநில பறவையாக சிட்டுக்குருவியை கடந்த 2012–ம் ஆண்டு அறிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20–ந்தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலக சிட்டுக்குருவி தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இயற்கை ஆர்வலரும், சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க பல ஆண்டுகளாக போராடி வருபவருமான, ஏ.சாதனா ராஜ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
சிட்டுக்குருவி இந்த நாட்டை சேர்ந்தது, அந்த நாட்டை சேர்ந்தது என்று குறுகிய வட்டத்துக்குள் அதை கொண்டு வந்து விட முடியாது. மனித இனம் எங்கெல்லாம் வாழ்கிறதோ, அங்கெல்லாம் சிட்டுக்குருவியும் வாழும். மனிதனை சார்ந்து வாழும் ஒரே பறவை, சிட்டுக்குருவி தான். ஆஸ்திரேலியா தீவில் மனிதன் குடியேறியபோது, அவனுடன் சிட்டுக்குருவியும் சேர்ந்து அங்கு குடியேறி விட்டது.
பட்டினி சாவு
இயற்கையை அழிக்கும் விதமான மனிதனின் செயல்பாடும், அறிவியல் வளர்ச்சியும், இந்த அரிய வகை இனத்தை அழிக்க தொடங்கிவிட்டது. குளம், குட்டைகள் எல்லாம் காணாமல் போய் விட்டன. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இப்போது நடைபெறும் விவசாயமும், இயற்கை உரங்களை புறம் தள்ளி விட்டு, செயற்கை ரசாயன உரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாறி விட்டது. வீட்டு முற்றத்தில் தானியங்களை காயவைத்து அரைத்த காலம் போய், ‘பாக்கெட்’ மசாலாவுக்கு மாறிவிட்டோம். இதனால் குருவிகள் இரைகள் கிடைக்காமல், பட்டினியில் சாகத் தொடங்கின.
காற்றோட்டம் இல்லாத ‘ஏர்கண்டி‌ஷன்’ வீடுகள் அதிகரித்ததாலும், குடிசை, ஓடு வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததாலும் சிட்டுக்குருவிகளின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டன. உணவும், உறைவிடமும் இல்லாமல் இந்த இனம் தற்போது அழியும் தருவாயில் உள்ளது.
சிட்டுக்குருவிகளின் அழிவு, அந்த இனத்துக்கு மட்டும் அழிவல்ல, மனிதனுக்கும் பலவகையான அழிவுகளை ஏற்படுத்துகின்றன. டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் அதிக அளவில் பரவுவதற்கும், அதனால் உயிர்இழப்பு ஏற்படுவதற்கும், சிட்டுக்குருவிகள் அழிவும் ஒரு காரணமாக இருக்கிறது.
ஆரோக்கிய வாழ்வு
கொசுக்கள் முட்டையில் இருந்து வெளியில் வரும்போது புழுவாகத்தான் இருக்கும். அந்த புழுவை தான் தன் குஞ்சிகளுக்கு சிட்டுக்குருவிகள் இரையாக கொடுக்கும். இப்போது, சிட்டுக்குருவி அழிவினால், கொசு இனம் பல்கி பெருகி விட்டது. அதனால் புதுப்புது நோய்கள் எல்லாம் மனிதனுக்கு வருகிறது. எனவே மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிட்டுக்குருவிகள் மிகவும் அவசியமாகும்.
அதனால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் சிட்டுக்குருவிகள் சுதந்திரமாக கூடுகட்டி வாழ வழிவகை செய்யவேண்டும். குருவிகள் கூடு கட்டுவதற்கு வீட்டில் வசதி இல்லை என்றால், செயற்கை கூண்டுகளை வீட்டில் வைக்கலாம். இந்த செயற்கை கூண்டுகளை இலவசமாக வழங்கி வருகிறேன். இந்த கூண்டு வேண்டுபவர்கள், 9445249240 என்ற என்னுடைய செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive