இந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் கோவை ஆர்.எஸ்.புரம்; 5-வது இடத்தில் சென்னை அண்ணாநகர்
இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரம் (பி-2), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதினை மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
சிறந்த 10 காவல்நிலைய பட்டியலில் தமிழகத்தின் மற்றொரு காவல் நிலையமாக அண்ணாநகர்(கே-4) தேர்வாகி உள்ளது. இது 5-வதுஇடத்தில் உள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் அகில இந்திய டிஜிபி மற்றும் ஐஜிக்களின் மாநாடு நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மூன்று தலைசிறந்த காவல் நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விருதுகள் அளித்து கவுரவித்தார். முதல் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதினை ஆர்.எஸ்.புரம் நிலையத்தின் ஆய்வாளர் டி.ஜோதி பெற்றுக் கொண்டார். தமிழக அரசின் காவல்துறை தலைவர்(டிஜிபி) டி.கே.ராஜேந்திரனும் அம்மாட்டில் கலந்து கொண்டார்.இந்த விருது பெற்றது தமிழகத்திற்கு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. இதே தரமுள்ள காவல் நிலையங்களை கோயம்புத்தூரின் அனைத்து பகுதிகளிலும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என டிஜிபி கூறினார்.
இரண்டாவது சிறந்த காவல் நிலையத்திற்கான விருது தெலுங்கானாவின் ஐதராபாத் நகரின் பஞ்சகுட்டா மற்றும் மூன்றாவது உபியின் லக்னோவில் உள்ள குடம்பாவிற்கும் அளிக்கப்பட்டது. இதற்கான விருதுகளை அந்த இரு காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
முதல் பத்தில் உ.பி.,யில் இரண்டு தேர்வு:
தேசிய அளவில் மத்திய உள்துறை அமைச்சகம் தேர்ந்தெடுத்த சிறந்த 10 காவல்நிலையங்களில் உபியிலும் 2 தேர்வாகி உள்ளன. ஏழாவது இடத்தில் அம்மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தின் கிரோர் காவல் நிலையம் தேர்வாகி உள்ளது. தேசிய அளவில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் இம்மாநிலத்தில் இரு காவல்நிலையங்களின் தேர்வு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. உ.பி.யின் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக மெயின்புரி அமைந்துள்ளது. இதன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக தமிழரான எஸ்.ராஜேஷ் பணியற்றி வருகிறார்.
இது குறித்து  ராஜேஷ் கூறும்போது, 'மெயின்புரியின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் குற்றங்களை தடுப்பதில் நாம் ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்கிறோம். இதில் சிறந்த பட்டியலின் ஏழாவது இடம்பெற்ற கிரோர் காவல் நிலையத்தினர் குற்றத்தடுப்பு பணியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். பொதுமக்கள் புகார்களின் மீதான அனுகுமுறையில் மிகுந்த ஆர்வம் காண்பித்தனர். வழக்கு சம்மந்தமான கோப்புகளை பார்வையிட்ட உள்துறை அமைச்சக குழு அப்பகுதியின் பொதுமக்களிடமும் விசாரித்து ஆய்வு செய்தனர். இதில், குற்றத்தடுப்பு பணியில் எங்கள் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

Share this

0 Comment to "இந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் கோவை ஆர்.எஸ்.புரம்; 5-வது இடத்தில் சென்னை அண்ணாநகர்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...