மாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு

'பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினசரி தேர்வு வைக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச்சில், பொது தேர்வு துவங்குகிறது; ஏப்ரலில் தேர்வு முடிகிறது.தேர்வுக்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசு தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணியில், ஆசிரியர்கள் மும்முரமாக உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் காலை, மாலையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், பிளஸ் 2வுக்கு, முதலாம் திருப்புதல் தேர்வும், மாநில அளவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தினசரி சிறப்பு பயிற்சியுடன், காலை அல்லது மாலை நேரங்களில், மாதிரி தேர்வுகளையும் நடத்த வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தினசரி தேர்வு நடத்தி, அன்றே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை அறிவிக்க வேண்டும். எந்த பாடத்தில் மாணவர்கள் திறன் குறைந்து உள்ளனரோ, அதில், கூடுதல் முயற்சி எடுத்து படிக்க மாணவர்களையும், பெற்றோரையும் அறிவுறுத்த வேண்டும் என, ஆலோசனை வழங்கி உள்ளனர்.

Share this