பெரம்பலுார் அருகே ஆசிரியரை தாக்கிய 4 பேர் கைது

பெரம்பலுார் அருகே, ஆசிரியரை தாக்கிய முன்னாள் மாணவர் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் கிராம அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர், ரத்தினவேல், 54. இவர், நேற்று காலை பள்ளிக்கு தாமதமாக வந்த, ஆறாம் வகுப்பு மாணவன் வினோத்குமாரை, வீட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.


இதனால், ஆத்திரமடைந்த வினோத் குமாரின் தந்தை கணேசன், தன் உறவினர்களான, 20 - 25 வயதுடைய மூவருடன் பள்ளிக்கு சென்று, 10ம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ரத்தினவேலை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், 20 வயதுடயவர், அந்த பள்ளியின் முன்னாள் மாணவர். இதனால், மாணவ - மாணவியர் அலறியடித்து, வகுப்பறையை விட்டு வெளியில் ஓடினர்.சக ஆசிரியர்கள், ஆசிரியர் ரத்தினவேலை மீட்டு, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரத்தினவேல் கொடுத்த புகார்படி, பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து, கணேசன் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.

Share this