பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்'

பாலிடெக்னிக் உதவி பேராசிரியர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 1,058 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு அரசு தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. இதில் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற்றதாக பட்டியல் வெளியானது. 

விடைத்தாள் ஸ்கேன் செய்யும் பணி, மதிப்பெண்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இப் பணியின் போது இடைத்தரர்கள் புகுந்து 200 பேரிடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை அதிக மதிப்பெண் பெற்றதாக திருத்தி மோசடியில் ஈடுபட்டது வெளியானது.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேர்வு தாள் திருத்தும் ஊழியர்கள், குறுக்கு வழியில் பயன்பெற முயன்றவர்கள் 156 பேர் மீது வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றிய சின்னச்சாமியும் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. இவர் மீது வழக்குப் பதிவு செய்த வேப்பேரி போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து சின்னசாமியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முத்துக்குமார சேஷன் உத்தரவிட்டுள்ளார்.

Share this