அரசு பள்ளிகளை தரம் உயர்த்த 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் உதவி

அரசு பள்ளிகளின் கட்டமைப்புக்களை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.'கார்ப்பரேட்' என்ற, பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசுத் துறையினர் பங்கேற்ற கருத்தரங்கம், சென்னையில், நேற்று நடந்தது. 


இதில், தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் பேசுகையில், ''கார்ப்பரேட் நிறுவனங்கள், மற்ற துறைகளில் செலவிடுவதை போல, சமூக பங்களிப்பு நிதியில், அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவ வேண்டும்,'' என்றார்.

பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களின் நிதியை நேரடியாக எங்களிடம் தர வேண்டாம். அரசு பள்ளிகளில், என்ன தேவை உள்ளது என்ற, விபரம் தருகிறோம். அதன்படி, பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் பணிகளை, நீங்களே மேற்கொள்ளுங்கள். உங்கள் நிறுவன பெயரையும் பதிவு செய்யலாம். 

கல்வித்துறைக்கு உதவும் நிறுவனங்களுக்கு, முதல்வர் தலைமையில் விழா நடத்தி, பாராட்டு சான்றிதழ் வழங்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

சி.ஐ.ஐ., என்ற, இந்திய தொழில் கூட்டமைப்பின், தமிழக துணை தலைவர், பொன்னுசாமி, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், இயக்குனர்கள், நந்தகுமார், இளங்கோவன், கருப்பசாமி, ராமேஸ்வர முருகன் பங்கேற்றனர்.

சி.ஐ.ஐ., துணை தலைவர், பொன்னுசாமி கூறியதாவது:'கார்ப்பரேட்' நிறுவனங்கள், தங்களின் லாபத்தில், ௨ சதவீதத்தை, சமூக பங்களிப்பு நிதிக்கு செலவிட வேண்டும்.
அந்த நிதியில், ஏரிகள் சீரமைப்பு, குளங்கள் துார்வாருவது, வெள்ள சீரமைப்பு பணிகள் என, பல வகையில் செலவிடுகிறோம். தற்போது, பள்ளிகளின் தரம் உயர்த்தும் பணிகளிலும் ஈடுபட உள்ளோம்.

உள்கட்டமைப்பு மேம்பாடு மட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேச, தேவையான பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டு உள்ளோம்.அதற்காக, கூடுதலாக தற்காலிக ஆசிரியர் நியமிப்பது, ஆய்வகம் அமைப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ள முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Share this