தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் தரைக்காற்று பலமாக வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகளால் கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதைதொடர்ந்து, உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில், நவம்பர் 30ஆம் தேதி வங்க கடலில் உருவான ஓகி புயலால் தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. ஓகி புயலால் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக சேதம் ஏற்பட்டது.

இருப்பினும் இந்தக் காலத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு 9 சதவிகிதம் குறைவாக பருவமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பருவமழை முடிந்தவுடன் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Share this