இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாளில் மாநில மொழிப்பாடம் இடம் பெறும் - உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ உறுதி

‘இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாளில் மாநில பாடத்திட்ட பாடங்களும் இடம்பெறும்’ என உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. கடந்தாண்டு நடந்த நீட் தேர்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.
மேலும், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டதால், மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறமுடியாமல் போனது. ஏராளானோர் தோல்வியை தழுவினர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், மருத்துவ இடம் கிடைக்காமல்போனது. இந்நிலையில், இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாளில் மாநில பாடத்திட்டங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

ஆனால், சிபிஎஸ்இ இதை மறுத்தது. கடந்தாண்டு நடைமுறையே பின்பற்றப்படும் என அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும்படி சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஎஸ்இ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நாடு முழுவதும் இந்தாண்டும் நீட் தேர்வு ஒரே மாதிரியாக நடத்தப்படும். இந்தாண்டு வினாத்தாளில் மாநில பாடத்திட்டங்களும் கண்டிப்பாக இடம் பெறும். வினாத்தாளில் மாநில மொழியும், ஆங்கிலமும் கண்டிப்பாக இருக்கும்’ என உறுதியளித்தது. இதை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Share this