10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை : சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்ச்சிக்கான மதிப்பெண்ணில், சி.பி.எஸ்.இ., புதிய சலுகையை அறிவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2017 வரை, 10ம் வகுப்புக்கு, பள்ளி அளவில் ஆண்டு இறுதி தேர்வு நடந்தது.
இத்தேர்வுகளில், பள்ளிகள் தன்னிச்சையாக மதிப்பெண் வழங்குவதால், கல்வித்தரம் குறைந்து உள்ளதாக, மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்தது.இதையடுத்து, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், '10ம் வகுப்புக்கு கட்டாய பொதுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், இந்தாண்டு முதன்முதலாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இதனால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு கமிட்டி, புதிய சலுகை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, நேற்று வெளியானது.அதில், சி.பி.எஸ்.இ., தலைவர், அனிதா கர்வால் கூறியிருப்பதாவது:இந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஒரு முறை அடிப்படையில், தேர்ச்சிக்கான மதிப்பெண்களில் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், அகமதிப்பீடுக்கான, 20 மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வுக்கான, 80 மதிப்பெண்களில், ஒட்டு மொத்தமாக, 33 சதவீதமான, 33 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி செய்யப்படுவர். அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்வில் தனித்தனியாக, 33 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.மேலும், முக்கிய பாடங்கள் தவிர, மாணவர்கள் எடுத்த விருப்ப பாடங்களில், செய்முறை தேர்வுகள் இருந்தால், அதிலும் ஒட்டுமொத்தமாக, 33 சதவீத மதிப்பெண்கள் பெற்றால், தேர்ச்சி என, அறிவிக்கப்படும்.தொழிற்கல்வி பாடப் பிரிவு மாணவர்களுக்கு, மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு மட்டும், ஒட்டுமொத்தமாக, 33 சதவீத மதிப்பெண் பெறலாம் என்ற, புதிய சலுகை பொருந்தும். செய்முறை தேர்வு அடங்கிய, மற்ற தொழிற்கல்வி பாடங்களுக்கு, அகமதிப்பீடாக, ஏற்கனவே, 50 சதவீத மதிப்பெண் வழங்கப்படுவதால், அந்த பாடங்களுக்கு, புதிய சலுகை பொருந்தாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this

0 Comment to " 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் சலுகை : சி.பி.எஸ்.இ., வாரியம் அறிவிப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...