தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் பங்கு மிக
முக்கியமானதாகும். தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமுமே
நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். அத்தகைய
தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், பல்வேறு
பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்
தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ்
மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும்
தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதமும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவன
தொழிலாளர்களுக்கு 10 சதவிகிதமும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு
மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள், நுகர்பொருள் வாணிபக்கழகம்
ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கத் தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதமும்,
மற்றவர்களுக்கு 10 சதவிகிதமும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு
வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று
வாரியத்தில் பணிப்புரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு கடந்த
ஆண்டைப்போல் இந்தாண்டும் 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்படுகிறது.
அதேநேரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும்
டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், தேயிலைத்தோட்டக்கழகம், கூட்டுறவு
மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்
இணையம் நிறுவனங்களில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ்
மற்றும் 11.67 அல்லது 1.67 விழுக்காடு கருணைத்தொகை வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி
மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் முதலமைச்சர்
அறிவித்துள்ளார். உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு
வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு
20 சதவிகித போனஸும், லாபம் ஈட்டாத வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி
மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்படவுள்ளது.
இவை தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிப்புரியும் ஒப்பந்த
ஊழியர்களுக்கு 4 ஆயிரமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தற்காலிக
ஊழியர்களுக்கு 3 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3ஆயிரம் ரூபாயும்,
தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு 2ஆயிரத்து
400 ரூபாய் கருணைத்தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் 8ஆயிரத்து 400 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 16ஆயிரத்து 800
ரூபாய் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு போனஸ் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் 3 லட்சத்து 58ஆயிரத்து 330 தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...