3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு : ஜப்பானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தமிழகத்தில், 3,000 அரசு பள்ளிகளில், கேமரா வுடன் கூடிய, 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. தமிழக பள்ளி கல்வியில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து பள்ளிகளிலும், நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 'டேப்லெட்' என்ற, கையடக்க கணினியுடன் பாடம் கற்றுத் தர திட்டமிடப்பட்டு, 3,000 பள்ளிகளுக்கு தலா, 10 வீதம், 30 ஆயிரம், 'டேப்லெட்' வாங்க, 'டெண்டர்' விடப்பட்டது.இந்நிலையில், டேப்லெட் வழங்குவதற்கு பதில், வகுப்பறைகளில், கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பை துவக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, 'எல்மோ' என்ற நிறுவனத்துடன், தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது. முதல் கட்டமாக, ஐந்து அரசு பள்ளிகளில், கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு வகுப்புஅறையில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, கேமராவுடன் இணைந்த ஸ்கேனர் கருவி, டிஜிட்டல் எழுது கருவி, வீடியோ ரெக்கார்டர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உரையாடல்களை, ஒரு மாதம் வரை சேமித்து வைக்கும் வசதியுள்ள, ஸ்மார்ட் கருவி போன்றவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, வீடியோ ரெக்கார்டர் மற்றும் புகைப்பட கேமராவை பயன்படுத்தலாம். ஆசிரியர் முன் கேமராவை திருப்பினால், அவர் பாடம் நடத்துவதை திரையில் பார்க்கலாம். அதேபோல, மாணவர்கள் சந்தேகம் கேட்டால், அவர்களின் முகத்தை, மற்ற மாணவர்கள் திரையில் பார்க்க முடியும். புத்தகத்தில் உள்ள சில வரிகளையோ, படங்களையோ மாணவர்களுக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்றால், கேமராவில் காட்டினால் அது, திரையில் பெரிதாக தெரியும். வகுப்பின் கடைசி பெஞ்ச் மாணவர்கள் வரை, பாடம் நடத்துவதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அந்த மாணவர்கள் கேள்வி கேட்டால், கேமராவில் அவர்களின் முகத்தை பார்க்க முடியும்.

Share this

0 Comment to " 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு : ஜப்பானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...