கின்னஸ் சாதனைக்கு முயற்சி: சேலத்தில் ஒரே இடத்தில் 4,200 பேர் கை கழுவினர்


உலக கை கழுவும் தினத்தையொட்டி,
கின்னஸ் சாதனை முயற்சியாக சேலத்தில் ஒரே இடத்தில் 4,200 பேர் கை கழுவினர்.
உலக கை கழுவும் தினம் சேலம் மாவட்டத்தில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட குழாய்கள் அமைக்கப்பட்டு, அதில் ஆட்சியர், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கை கழுவி, கை கழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சேலம் அம்மாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ-க்கள் செம்மலை, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஆட்சியர் ரோஹிணி பேசியதாவது:
கைகளால் உணவு சாப்பிடும் போதுதான் பாக்டீரியா, வைரஸ் போன்ற பல்வேறு கிருமிகள் வாய் வழியாக வயிற்றுக்குள் செல்கிறது
எனவே, நோய் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்து சேலம் மாவட்டத்தை சுகாதாரமான மாவட்டமாக மாற்ற நம் கை சுத்தம் மிக மிக அவசியமாகும்.
அண்டை மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தடுக்க நம்மிடம் எந்த ஒரு தடுப்பூசியும் கிடையாது. இந்நிலையில் நம் கைகளை சோப் பயன்படுத்தி குழாய் நீரினால் நன்றாக சுத்தம் செய்தாலே பன்றிக் காய்ச்சல் அல்லது சளி, காய்ச்சல் போன்றவை தொற்றுவதில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்.

இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
நிகழ்ச்சியின்போது, கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் கை கழுவது குறித்து விழிப்புணர்வு பாடலை பாடி நடனமாடினர். மேலும், மாணவிகள் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று, 'கை கழுவும் தினம் சேலம்' என்ற வாசகத்தை வடிவமாக்கினர். தொடர்ந்து அனைவரும் கை கழுவினர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பூங்கொடி, உதவி ஆட்சியர் (பயிற்சி) வந்தனா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சாதனை முயற்சி
சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் உலக கை கழுவும் தினத்தையொட்டி கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆட்சியர் ரோஹிணி தலைமையில், கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆயிரக்கணக்கில் திரண்டனர். அவர்களுக்கு முறையாக கை கழுவுவது, அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.


 பின்னர் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்த குழாயில் அனைவரும் ஒவ்வொருவராக வரிசையில் வந்து கைகளை சோப்பு கொண்டு கழுவினர். மொத்தம் 4,200 பேர் கை கழுவினர்.
இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக வழக்கறிஞர் சரவணன், உதயகுமார், கோவிந்தராஜ் மற்றும் பட்டைய கணக்காளர்களான வெங்கட சுப்ரமணியம், அருள்செல்வன் உள்ளிட்டவர்கள் கின்னஸ் புத்தக பதிவு முயற்சிக்காக பங்கேற்றனர்.


Share this

0 Comment to "கின்னஸ் சாதனைக்கு முயற்சி: சேலத்தில் ஒரே இடத்தில் 4,200 பேர் கை கழுவினர்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...