உத்தர பிரதேச மாநிலம்,
லக்னௌவில் நான்காம் ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (ஐஐஎஸ்எஃப்) அக்டோபர் 5 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக "அறிவியல் கிராமம்' தலைப்பில் நடைபெறும் மாபெரும் மாணவர்கள் முகாமில் நாடு முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த சர்வதேச அறிவியல் திருவிழா லக்னௌவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஸ்டானில் நடைபெறுகிறது. அக்டோபர் 6-ஆம் தேதி நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்துப் பேசுகிறார்.
இந்நிகழ்வில் 5,000 மாணவர்கள், 550 ஆசிரியர்கள், வடக்கு - கிழக்கு பிராந்தியத்தில் இருந்து 200 மாணவர்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் மற்றும் 20 சர்வதேச பிரதிநிதிகள், பன்னாட்டு நிபுணர்கள் 10 பேர், பெண் விஞ்ஞானிகள் 800 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "அறிவியல் கிராமம்' எனும் தலைப்பில் நடைபெறும் மாணவர்கள் முகாமில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் வளர்ச்சிகள் சென்றடையும் நோக்கிலும், அறிவியலில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியானது பிரதம மந்திரி நாடாளுமன்ற சிறு கிராமத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தொகுதியின் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தில் இருந்து 5 மாணவர்கள், ஒரு ஆசிரியரை அறிவியல் கிராமம் நிகழ்ச்சிக்கு பரிந்துரை செய்வர். இதில் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இடம்பெறுவர். இதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் இந்த அறிவியல் கிராமம் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.
அதன்படி, தமிழ்நாடு, திரிபுரா, கேரளா, ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இந்நிகழ்ச்சிக்கு ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவியல் கிராமம் நிகழ்ச்சியில் பல்வேறு அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சியும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2-ஆம் தேதிவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 1,939 வரை பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1,144 மாணவர்கள், 495 மாணவியர், 215 ஆசிரியர் கள், 85 ஆசிரியைகள் இடம்பெற்றுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவிஅறிவியல் அமைச்சகங்கள் நடத்துகின்றன. நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை உயிரித் தொழிநுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மேற்கொள்கிறது. முதலாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா புது தில்லி ஐஐடியில் 2015, டிசம்பர் 4 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. மூன்றாவது திருவிழா கடந்த ஆண்டு சென்னையில் அக்டோபர் 13 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...