நடிகர் ஜி.வி.பிரகாஷ் முயற்சியால் அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்கம்


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முயற்சியால் ஆங்கில வழி மழலையர் வகுப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், அதனை ஊக்கப்படுத்தும் பொருட்டு நடிகர் ஜி.வி.பிரகாஷ், சில அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, ஆங்கில வழி மழலையர் வகுப்புகளை தொடங்குவதற்கு உதவி வருகிறார்.
அதே போல, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள கந்தாடு அரசு தொடக்கப் பள்ளியையும் அவர் தத்தெடுத்துள்ளார். அந்தப் பள்ளியில், ஆங்கில வழி மழலையர் வகுப்பு (எல்.கே.ஜி) தொடங்குவதற்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமை வகித்தார்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் பங்கேற்று ஆங்கில வழி வகுப்பை தொடக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், பெற்றோர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதால், இது போன்று பள்ளியை தத்தெடுத்து அங்கு ஆங்கில வழி முன் மழலையர் வகுப்பு நடத்த உதவி வருகிறேன். இங்கு வகுப்புக்கென தனியாக ஒரு ஆசிரியர் நியமித்து அவருக்கான சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. இதே போல, விஜயதசமி தினத்தில் மேலும் 6 பள்ளிகளைத் தத்தெடுக்க உள்ளேன் என்றார்.
மரக்காணம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயசங்கர், இளஞ்செழியன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சம்பத், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கவாஸ்கர், தலைமை ஆசிரியர் பிரேமலதா மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினர். துகுறித்து விழுப்புரம் கல்வி அதிகாரிகள் கூறுகையில், மாநிலம் முழுவதும் எல்கேஜி வகுப்பைத் தொடங்க 40 பள்ளிகளை ஜி.வி.பிரகாஷ் தத்தெடுக்க உள்ளார். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் ஒரு அரசுப் பள்ளியில் எல்கேஜி வகுப்பைத் தொடங்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில், கந்தாடு அரசுப் பள்ளி ஆசிரியை அன்னப்பூரணி மேற்கொண்ட முயற்சி காரணமாக அந்தப் பள்ளியில் ஜி.வி. பிரகாஷ் மழலையர் வகுப்பைத் தொடங்கியுள்ளார். அந்தப் பள்ளியில் வகுப்பை நடத்துவதற்கான இடம் அரசு சார்பில் வழங்கப்படும்.
ஜி.வி. பிரகாஷால் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் எல்.கே.ஜி. வகுப்பை நடத்துவர். தொடர்ந்து, அடுத்தாண்டு யுகேஜி வகுப்பை நடத்துவர். இங்கு படிக்கும் மழலையர்கள் வழக்கம் போல, அதே பள்ளியில் 1-ஆம் வகுப்பு சேர்க்கப்படுவர். இதனால், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்றனர்.

Share this

0 Comment to "நடிகர் ஜி.வி.பிரகாஷ் முயற்சியால் அரசுப் பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்கம் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...