மோசமான தரத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங்!மோசமான தரத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங்!
இந்தியாவில் 4ஜி வீடியோ ஸ்ட்ரீமிங் மிக மோசமான தரத்தில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் அண்மைக்காலமாக இணைய இணைப்பு வசதிகள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் பரவலாக அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது கைபேசிகளின் வழியாக இணையதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் 4ஜி சேவைகள் கிடைக்கும் அளவுக்குத் தடையில்லாத வீடியோ அனுபவங்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஓபன் சிக்னல் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘இந்தியாவில் 4ஜி வசதிகள் கிடைக்கும் அளவுகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அதிகபட்சமாக கொல்கத்தாவில் 90.85 விழுக்காடு அளவுக்கு 4ஜி சேவைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் 87.08 விழுக்காடும், ஆந்திராவில் 88.13 விழுக்காடும், கர்நாடகாவில் 87.85 விழுக்காடும் 4ஜி சேவைகள் கிடைக்கின்றன. நாட்டிலேயே குறைந்தபட்சமாக கேரளாவில் 82.56 விழுக்காடு 4ஜி சேவைகள் கிடைக்கின்றன.

ஆனால் தடையில்லாத வீடியோ அனுபவங்கள் கொல்கத்தாவில் 43.3 விழுக்காடும், தமிழ்நாட்டில் 41.45 விழுக்காடும், கேரளாவில் 40.83 விழுக்காடும், ஆந்திராவில் 40.08 விழுக்காடும், கர்நாடகாவில் 39.84 விழுக்காடும் மட்டுமே கிடைக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் அதிகபட்சமாக 44.23 விழுக்காடு தடையில்லாத வீடியோ அனுபவங்கள் கிடைக்கின்றன. மிகக் குறைவான அளவாக வடகிழக்கு பகுதிகளில் 29.71 விழுக்காடு தடையில்லாத வீடியோ அனுபவங்கள் கிடைக்கின்றன.’

வீடியோக்களின் தரத்தைப் பொறுத்தவரையில் 0 முதல் 40 விழுக்காடு மதிப்புடையவை தரமற்றது எனவும், 40 முதல் 55 விழுக்காடு மதிப்புடையவை சுமார் எனவும், 55 முதல் 75 விழுக்காடு மதிப்புடையவை தரமானவை எனவும், 75 முதல் 100 விழுக்காடு மதிப்புடையவை மிகவும் தரமானவை எனவும் வகைப்படுத்தப்படுகிறது. அந்தவகையில் இந்தியா முழுவதும் பரவலாக 4ஜி வசதிகள் கிடைத்தாலும், அதில் சரிபாதி அளவுக்குத்தான் தடையில்லாத வீடியோ அனுபவங்கள் கிடைப்பது நெட்வொர்க் நிறுவனங்களின் தரமில்லாத சேவையையே குறிக்கிறது.

Share this