பள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் புதிய திட்டம் தொடக்கம்

பள்ளி மாணவர்களைக் கொண்டு
கிராமப்புறங்களில் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் புதிய திட்டம் வேலூரில் தொடங்கப்பட்டுள்ளது. விஐடி பல்கலைக்கழகம் சார்பில் தொடங்கியுள்ள இந்தத் திட்டம் மூலம் நடவு செய்து பராமரிக்கப்படும் பனை மரங்களில் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் பெயரை பொறிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பாரம்பரிய மரமான பனைமரம், வறட்சியை தாங்கி வளரக்கூடியது மட்டுமின்றி மண் அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தக் கூடியதுமாகும். வேர் முதல் நுனி வரை மண் ணுக்கும், மக்களுக்கும் தீங்கிழைக்காத இயற்கைப் பொருள்களை அளிக்கக்கூடிய கற்பகவிருட்சம் என பனை மரத்துக்கு பல சிறப்புகள் உள்ளன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனை மரம் தற்போது அழிவின் அபாயத்தில் உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பனை மரங்களைப் பாதுகாப்பதுடன், பனை மர விதைகள் நடவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
இதன்தொடர்ச்சியாக, விஐடியின் சமூகவியல், மொழியியல் பள்ளி சார்பில் பனைவிதை திருவிழா பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் பள்ளி மாணவர்களைக் கொண்டு பள்ளியைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் சுமார் 800 பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டன. மேலும், மாணவர்கள் தலா 10 பேர் வீதம் பல குழுக்களாக பிரிக்கப் பட்டு அந்த பனை மர விதைகள் ஓரளவுக்கு வளரும் வரை அவற்றைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஐடி சமூகவியல், மொழியியல் பள்ளியின் பேராசிரியை எம்.தேன்மொழி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பனை விதைகள் நடவின் அவசியத்தை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக இந்தப் பனை விதை திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நடவு செய்து பாதுகாக்கப்படும் பனை மரங்கள் வளர்ந்தவுடன் அந்த மரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர் பொறிக்கப்படும். இதனால், மாணவர்களை பனை மர நடவை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். மாதம் ஒரு பள்ளி என்ற அடிப்படையில் இந்த பனை விதை திருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இதேபோல், கடந்த மாதம் நடத்தப்பட்ட விதைப்பந்து திருவிழாவின் மூலம் 25 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டு காட்பாடி அருகே உள்ள சஞ்சீவிராயன் மலையில் தூவப்பட்டது. அந்த விதைகளில் இருந்து செடிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன என்றார் அவர்.
இந்த பனை விதை திருவிழாவில் விஐடி பேராசிரியர்கள் சுரேஷ்குமார், சந்தோஷ்குமார், பள்ளியின் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் குப்புராஜ், பசுமைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Share this

0 Comment to "பள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் புதிய திட்டம் தொடக்கம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...