'ஸ்காலர்ஷிப்' தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

உதவி தொகைக்கான தேர்வுகளுக்கு, வினா வங்கி மற்றும் பயிற்சி புத்தகங்கள் வெளியிட, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், பல்வேறு திட்டங்களில், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, பல்வேறு திறன் அறிதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 


தமிழகத்தில், 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வு எழுதும் மாணவர்கள், மாநில தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், தேசிய தேர்வை எழுத வேண்டும். இரண்டிலும் தேர்ச்சி பெற்றால், ஒன்பதாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க, மத்திய அரசின் உதவி தொகை வழங்கப்படும்.
அதேபோல, மாநில வருவாய் வழி திறன் தேர்வு, ஊரக திறனாய்வு தேர்வு ஆகியவை, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வுகளை, தமிழகத்தில், அரசு தேர்வு துறை நடத்துகிறது. தேர்வுக்கான அறிவிப்பு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான அரசு பள்ளிகள், தங்கள் மாணவர்களுக்கு, இந்த தேர்வுகளின் விபரத்தை தெரிவிப்பதில்லை. தேர்வு எப்படி நடக்கும்; அதற்கான பாட திட்டம் என்ன; வினாக்கள் எப்படி அமையும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தாததால், தனியார் பள்ளி மாணவர்களே, இந்த உதவிகளை பெறுகின்றனர்.
இதுகுறித்து, அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:அரசு பள்ளிகளில், கல்வி உதவி தொகைக்கான திறன் தேர்வுகள் குறித்து, எந்த வழிகாட்டுதலும் இல்லை. அதனால், தனியார் பள்ளி மாணவர்கள், இந்த தேர்வில், அதிகம் தேர்ச்சி பெற்று, உதவி தொகை பெறுகின்றனர். எனவே, அரசு பள்ளி மாணவர்களும், உதவி தொகைக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில், வினா வங்கி மற்றும் பயிற்சி புத்தகங்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share this