தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் பேராசிரியர் காலி பணியிடங்களால் மாணவர்கள் அவதி

தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் பேராசிரியர் காலி பணியிடங்களால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் கலை, அறிவியல் படிப்புகளில் சேருகின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கை, போதிய வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பு மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர்களின் ஆர்வமும், சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தாண்டு அரசு கலைக்கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு தமிழக உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதற்கேற்ப அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. ஆனால் பல அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளது. இதனால் கல்லூரிகள் தரமும், மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் பேராசிரியர்களுக்கு பனிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும் இந்தாண்டு 264 புதிய பாடத்திட்டங்களை அரசு அறிமுகம் செய்துள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கையால் விரைவில் 30 கல்லூரிகளை திறக்கவும், புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யவும் முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப புதிதாக உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் அறிவிப்பு மட்டுமே வருகிறது. தமிழகத்தில் 4,300 கவுரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை செய்தால் கூட நிலைமை சீராக வாய்ப்பு உள்ளது. தற்போது 3 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு காலியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆய்வக உபகரணங்கள் இல்லாததால் 20 சதவீத ேசர்க்கை பல கல்லூரிகளில் இல்லை
மாணவர் சேர்க்கையில் கலை பாடப்பிரிவில் 20 சதவீத மாணவர்களின் சேர்க்கைக்கு கலைக்கல்லூரிகள் முன்வந்துள்ளன. ஆனால் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு பல அரசு கல்லூரிகள் முன்வரவில்லை. அதற்கு கல்லூரிகளில் போதிய அளவு அறிவியல் உபகரணங்களுடன் கூடிய ஆய்வக வசதி இல்லாததால் மாணவர்களுக்கு முறையாக செயல்முறை பயிற்சி மற்றும் செய்முறை தேர்வுகள் எழுதுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் கல்லூரி நிர்வாக குழுவின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அதில் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை அனுமதிக்கக்கூடாது என்று அறிவித்துள்ளதாக கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Share this