அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடத்தில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மணல்மேல்குடி, தக்கலை பகுதியில் தலா 7 செ.மீ. மழையும், குடவாசல், குளித்தலையில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் அக்டோபர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 6 மற்றும் 7ம் தேதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்காக நகரக் கூடும். மேலும் இது புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் குமரி கடல் மற்றும் லட்சத் தீவுப் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதியில் அக்டோபர் 6 முதல் 8ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும், ஆழ்க்கடலில் உள்ள மீனவர்கள் அக்டோபர் 5ம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...