சென்னை: நீட் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பயிற்சி
மையங்களில் படித்தவர்களில் ஒரு மாணவருக்கு கூட இந்தாண்டு மருத்துவ
படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல்
வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாடு முழுவதும் நீட்
தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட்தேர்வுக்கு பயிற்சி மையங்கள்
நடத்தப்படுகின்றன. இதற்காக பள்ளிக்கல்வித்துறை, ஸ்பீட் மெடிக்கல்
இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்துடன் இணைந்து 412 பயிற்சி மையங்கள் அமைத்து
பயிற்சி அளித்து வருகிறது. இதில் 19 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று
வருகின்றனர். தமிழகத்தின் சென்னை , காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 க்கும்
மேற்பட்ட இடங்களில் இருந்து சுமார் 2,747 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு
விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.கடந்த ஆண்டு அரசுபள்ளியை சேர்ந்த
மூன்று மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 4
மாணவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆனால் இந்த
முறை ஒரு மாணவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு அரசுபள்ளி மற்றும்
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களில்நீட் தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவர்
உமாசங்கர். இவர் பெற்ற மார்க்குகள் 440. இவர் விருதுநகர் மாவட்டத்தை
சேர்ந்தவர்.
இருப்பினும் இவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை.இது குறித்து அந்த
மாணவரின் தந்தை கூறுகையில், '' அரசு மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு
பி.சி.,பிரிவினருக்கு இந்த ஆண்டுக்கான கட் ஆப் மார்க் 474 ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் என் மகனுக்கு சீட் கிடைக்கவில்லை,''
என்றார்.கடந்த ஆண்டுநடைபெற்ற நீட் தேர்வில் 10 மாணவர்களே 300 மார்க்
பெற்றிருந்தனர். அதனுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 32 மாணவர்கள் 300
மார்க்கிற்கும் அதிகமாக பெற்றுள்ளனர். பயிற்சி இல்லை: அதிகாரி ''கடந்த
ஆண்டு குறைந்த மார்க் பெற்ற மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுதும் போது
கூடுதலாக 100 மார்க் வரை எடுக்கின்றனர்.
ஆனாலும் அவர்களுக்கு அரசு மெடிக்கல் கல்லூரியில் இடம் கிடைப்பது இல்லை.
வரும் சுற்றுகளிலும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை,'' என
கூறினார். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் அரசு சார்பில் நடத்தப்படும்
நீட் பயிற்சி மையங்களை துவக்கிவைத்து பேசிய கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் ஆண்டுக்கு 500 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில்
இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது. அரசுக்கு
ஆர்வமில்லை பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூறிய அதிகாரி ஒருவர்
கடந்த ஆண்டில் நீட் பயிற்சி மையத்தின் மீது அரசு ஆர்வம் காட்டியது.
அதே நேரத்தில் பயிற்சி மையங்களுக்கு தேவையான நிதியை அளிக்காததால் கடந்த
ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து பயிற்சி வகுப்புகள்
நிறுத்தப்பட்டன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசு மீண்டும்
பயிற்சியை துவங்குவது குறித்து எவ்வித ஆர்வத்தையும் காட்டவில்லை என
கூறினார். பயிற்சி புத்தகம் இல்லை நீட் பயிற்சியாளர்களில் ஒருவர்
கூறுகையில், '' நீட் தேர்வில் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆண்டு
ஒன்றுக்கு குறைந்தபட்சம் 1,200 மணி நேரங்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.
ஆனால் அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் 500 மணி நேரம் மட்டுமே பயிற்சி
அளிக்கப்படுகிறது.மேலும் மாணவர்களுக்கு தேவையான ஸ்டடி மெட்டீரியல்களும்
வழங்கப்படவில்லை.
நீட் தேர்விற்கான பயிற்சியை கடந்த ஜூன் மாதமே துவங்கி இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது ஜூலை மாதம் இறுதியில் உள்ள போதிலும் இதுவரையில் பயிற்சி
துவங்கவில்லை,'' என கூறினார். தனியார் பள்ளிகள் சுறுசுறுப்பு நீட் தேர்வு
பயிற்சி குறித்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி செயலாளர்
கூறுகையில், '' நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இந்தாண்டு 49 மாணவர்கள் நீட்
தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 29 பேர் பழைய மாணவர்கள். ஒவ்வொரு
பள்ளியும் சிறந்த பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு
பள்ளிகளில் நீட் பயிற்சியை அளித்து வருகிறது. தற்போதைய மாணவர்களுக்கு ஒரு
பிரிவாகவும், பழைய மாணவர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் பயிற்சி அளிப்பதுடன்
மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறோம்,'' என்றார்.
நீட்டுக்கு அரசு எவ்வளவு செலவு செய்தது
ReplyDelete