3,200 அரசு பள்ளிக்கூடங்களில் நாப்கின் எந்திரங்கள் மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்

3 ஆயிரத்து 200 அரசு பள்ளிக்கூடங்களில் நாப்கின் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன என்று மதுரை ஐகோர்ட்டில், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கத்தின் செயலாளர் ஆனந்தவள்ளி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஏராளமான அரசு பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதமும் அதிகரித்துள்ளது. பருவம் எய்திய மாணவிகள், மாதவிடாய் காலத்தில் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், தானியங்கி நாப்கின் வழங்கும் எந்திரங்களையும், பயன்படுத்திய நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கான எந்திரங்களையும் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை என மொத்தம் 5 ஆயிரத்து 588 அரசுப்பள்ளிகள் உள்ளன.

இவற்றில் 3 ஆயிரத்து 200 பள்ளிகளில் நாப்கின் வழங்கும் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பிற பள்ளிகளில் நாப்கின்கள் பொறுப்பாசிரியர் ஒருவரால் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. 2011-12-ம் ஆண்டிலேயே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்கீழ் வளர் இளம் மாணவி ஒருவருக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 3 பாக்கெட் நாப்கின்கள் வழங்கப்படுகின்றன.

இதுதவிர அங்கன்வாடி பணியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் மூலமாகவும் பள்ளி செல்லாத வளர்இளம் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. மீதம் உள்ள 2 ஆயிரத்து 388 பள்ளிகளில் நாப்கின் எந்திரங்கள் வைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அவகாசம் அளிக்க வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Share this

0 Comment to "3,200 அரசு பள்ளிக்கூடங்களில் நாப்கின் எந்திரங்கள் மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...