NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"மணி ஒலித்ததும் தண்ணீர் குடிக்கணும்!' - மாணவர்களின் நலனின் அக்கறையுடன் செயல்படும் அரசுப்பள்ளி



திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 700 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் தினசரி பள்ளிக்கு ஒரு தண்ணீர் பாட்டிலுடன் செல்கின்றனர். அங்கு மாணவர்கள் தண்ணீர் குடிப்பாதற்காகவே மணி ஒலிக்கப்படுகிறது. உடனே மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் தண்ணீரை அருந்துகின்றனர். கண்டிப்பு இல்லாமல், அன்போடு மாணவர்களைத் தண்ணீர் அருந்த ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். மாணவர்கள் ஒருவர்கூடத் தண்ணீர் குடிக்கத் தவறுவதில்லை. மாணவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படுவதால், பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் கருங்குளம் அரசுப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.


தண்ணீர் அருந்தும் மாணவிகள்தண்ணீர் அருந்தும் மாணவிகள்
பள்ளித் தலைமையாசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் கூறும்போது, ``வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மாணவர்கள் அதிக நேரத்தைப் பள்ளியில்தான் செலவிடுறாங்க. பெற்றோர்களைப்போல மாணவர்களை அன்பாக நடத்துவது ஒவ்வோர் ஆசிரியரின் கடமை. மாணவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், அவர்களால் பள்ளிக்குச் சரியாக வரமுடியும். நல்லா படிக்க முடியும். மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம், மார்க் எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம் என்று வலியுறுத்துவோம்.

தினசரி 2 லிட்டராவது தண்ணீர் அருந்த வேண்டும் என்று டாக்டர்கள் சொல்றாங்க. ஆனால், யாரும் அதைக் கடைப்பிடிக்கிறதில்லை. பல பேரு அரை லிட்டருக்கும் குறைவாகத்தான் தண்ணீர் குடிக்கிறாங்கன்னு தெரிஞ்சது.  குறிப்பா, மாணவிகள் பெரும்பாலும் தண்ணீர் குடிப்பதே இல்லை"ங்கிறதும் தெரிஞ்சது. எனக்கு ரொம்ப கஷ்டமாகப் போச்சு. மாணவர்களைத் தினமும் தண்ணீர் குடிக்க வைக்க  என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் தண்ணீர் குடிப்பதற்காகத் தனியாகப் பெல் அடிக்கப்படுவதைக் கேள்விப்பட்டேன்.


கருங்குளம் அரசுப்பள்ளி கருங்குளம் அரசுப்பள்ளி
உடனே, சற்றும் யோசிக்காமல், இதுபற்றி ஆசிரியர்களிடம் பேசினேன். நம் பள்ளியிலும் தண்ணீர் குடிப்பதற்காகத் தனியாக பெல் அடிக்கலாம் என்று முடிவு செஞ்சோம். உடனே ஆசிரியர்கள் மாணவர்கள்கிட்ட, `வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும்போது அவசியம் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வர வேண்டும்' என்று அறிவுறுத்தினாங்க. இதற்காக, சிலருக்கு வாட்டர் பாட்டில்களையும் வாங்கிக் கொடுத்தோம்.

சில மாணவர்கள் தாங்களாகவே வாங்கிகிட்டு வந்துட்டாங்க. ஆரம்பத்தில் ஒரு சில மாணவர்கள் மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். நாள்கள் போகப்போக இப்போது எல்லாரும் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வர்றாங்க. தண்ணீர் குடிப்பதற்காகவே, பள்ளியில் தனியாக காலை 10.30 மணி, காலை 11.15 மணி, மதியம் 2.10 மணி, மதியம் 3 மணி என 4 முறை தனியாக பெல் அடிக்கப்படும்.

ஆசிரியர்களுடன் மாணவர்கள்ஆசிரியர்களுடன்  மாணவர்கள்
ஆரம்பத்தில சில மாணவர்கள் பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு தண்ணீர் குடிப்பதுபோல நடிப்பாங்க. அவங்களை திட்டவோ, அடிக்கவோ மாட்டோம். இப்படி உள்ள மாணவர்களைத் தனியாக அழைச்சிக்கிட்டுப்போய் தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை அன்பாக வலியுறுத்துவோம். எங்கள் பிள்ளைகள் உடனே புரிஞ்சுக்குவாங்க. இப்போ, அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லாமல் போயிடுச்சு.

இருக்கிற குடிநீர்த் தொட்டியிலும் தண்ணீர் இல்லை. போர்வெலில் சுத்தமாகத் தண்ணீர் இல்லை. எங்கள் சொந்த செலவில் லாரிகளில் குடி தண்ணீர் வாங்கி மாணவர்களுக்குக் கொடுக்கிறோம். அவங்க கொண்டு வரும் வாட்டர் கேன் முடிஞ்ச பிறகு இந்தத் தண்ணீரை அவர்கள் பயன்படுத்திக்கிறாங்க. பள்ளிகளில் தண்ணீர் தேவை எவ்வளவு அவசியமோ அதேபோன்று கழிப்பறை வசதியும் அவசியம்.

தண்ணீர் அருந்தும் மாணவர்கள் தண்ணீர்  அருந்தும் மாணவர்கள்
அதனால்தான் கழிப்பறைகளை சொந்த செலவில் சுத்தப்படுத்தி உள்ளோம். கடந்த ஆண்டுகளைவிட தற்போது அட்மிஷன் எண்ணிக்கையும் சற்றே கூடியிருக்கிறது. மாணவர்களை மட்டும் அறிவுறுத்துனா போதாது. ஆசிரியர்களும் கட்டாயம் தண்ணீர் எடுத்து வரணும்ன்னு கண்டிஷன் போட்டுருக்கேன். நானும் தினமும் வீட்டிலிருந்து இரண்டு பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்து விடுவேன்" என்கிறார் புன்சிரிப்புடன்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive