பி.எச்டி., 'கைடு' கிடைக்க தட்டுப்பாடு:தெளிவான விதிமுறைக்கு எதிர்பார்ப்பு!

பி.எச்டி.,யில் சேர அதிகமானோர் ஆர்வம் காண்பிக்கின்றனர். ஆனால் போதுமான 'கைடு' கிடைக்காததால், நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெளிவான விதிமுறைகள் வகுக்க வேண்டுமென, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக, வேலைவாய்ப்பு சமயத்தில், வெயிட்டேஜ்' மதிப்பெண்களை அதிகரிக்கும் வகையில், பலர் எம்.பில்., படிப்பில் சேர்ந்தனர். எம்.பில்., படிப்பு ரத்து என்ற புதிய அறிவிப்பால், சேர்க்கை முற்றிலும் சரிந்துள்ளது. அனைத்து மாணவர்களும், பி.எச்டி.,யில் சேர ஆர்வம் காண்பிப்பதால் சிரமம் எழுந்துள்ளது. எம்.பில்., முடித்து நெட்., தகுதியுடன் பணிக்காக காத்திருக்கும் மாணவர்கள் பலர், புதிய அறிவிப்பால் கலக்கத்தில் உள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலை உட்பட, பல்வேறு கல்லுாரிகளிலும் பெரும்பாலான துறைகளில் எம்.பில்., சேர்க்கை முற்றிலும் சரிந்துள்ளது.பாரதியார் பல்கலை ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், எம்.பில்., படிப்புக்கு, கடந்த சில ஆண்டுகளாகவே போதிய வரவேற்பில்லை. தற்போது, பி.எச்டி., கட்டாயம் என்ற அறிவிப்பாலும், எம்.பில்.,ரத்து என்ற தகவலாலும், மாணவர்கள் ஒருவரும் சேர முன்வரவில்லை. பி.எச்டி., படிப்புக்கு போட்டி அதிகம் உள்ளது' என்றார். யு.ஜி.சி., விதிகளின் படி, பேராசிரியர் ஒருவர் பி.எச்டி., 8, எம்.பில்.,3 , இணை பேராசிரியர் பி.எச்டி., 6, எம்.பில்., 2, உதவி பேராசிரியர் பி.எச்டி., 4, எம்.பில்.,1 என்ற எண்ணிக்கையில் மட்டுமே, மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட முடியும்.மாணவர் ஒருவர் பி.எச்டி., முடிக்க மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தேவைப்படும் என்பதால், அனைவருக்கும் பி.எச்டி., வாய்ப்பு என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

'விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி'கல்வியாளர் பிச்சாண்டி கூறுகையில், குறிப்பிட்ட சில துறைகள் தவிர்த்து, பல துறைகளில் தகுதிபெற்ற வழிகாட்டிகள்(கைடு) இல்லை என்பதே உண்மை. தற்போது, பி.எச்டி., கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிக மாணவர்கள் இப்படிப்பில் சேர முன்வருவர். இதற்கேற்ப உரிய வழிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். பி.எச்டி., செயல்பாடுகளில் வழிகாட்டியாக செயல்படும் ஆசிரியர்களின் விதிமீறல்களுக்கும், முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்,'' என்றார்.

Share this

0 Comment to "பி.எச்டி., 'கைடு' கிடைக்க தட்டுப்பாடு:தெளிவான விதிமுறைக்கு எதிர்பார்ப்பு!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...