NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Skypeல் ஆங்கிலப் பயிற்சி, கணினியில் கணிதம்... அசத்தும் கோனேரி குப்பம் அரசுப்பள்ளி மாணவர்கள்!



அரசுப்பள்ளி
அரசுப்பள்ளி
தனியார் பள்ளிகளுக்கு இணையான தூய்மை, மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் சிறப்பு வகுப்புகள், ஸ்கைப் மூலம் ஆங்கிலப் பயிற்சிகள், திருக்குறள் வகுப்புகள், கலை பண்பாட்டு பயிற்சிகள், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகள் எனத் தனியார் பள்ளிகளையே விஞ்சும் அளவிலான மாற்றங்களைத் தாங்கி நிற்கிறது விழுப்புரம் மாவட்டம் கோனேரிகுப்பம் 'அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.'

காலை 8 மணிக்குப் பள்ளியின் வாசலில் நுழையும்போதே நேர்த்தியான சீருடை அணிந்து சரியான உச்சரிப்பில் ஆங்கில வார்த்தைகள் கூறி நம்மை வரவேற்கின்றனர் ஆறாம் வகுப்பு மாணவர்கள். இது அரசுப் பள்ளிதானா என்ற தயக்கத்துடன் சில நிமிடங்கள் மெய்ம்மறந்து நிற்க வரிசையாய் நின்ற மாணவர்கள் கணித வகுப்புக்காக கம்ப்யூட்டர் லேபுக்குள் நுழைந்து இன்னும் ஆச்சர்யத்தை அதிகப்படுத்தினர்.

ஸ்கைப்  வகுப்புகள்
ஸ்கைப் வகுப்புகள்
இது போன்ற வசதிகளுக்காகத்தானே பெற்றோர்கள் தனியார் பள்ளியைத் தேடுகிறார்கள். இவையெல்லாம் அரசுப் பள்ளியில் எப்படிச் சாத்தியமானது எனப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விருட்சப்பதாஸை கேட்டோம்.

"இந்த மாற்றத்துக்கான விதையைத் தூவியவர் எங்கள் பள்ளியின் ஆசிரியர் ஆரோக்கியராஜ்" என இடைநிலை ஆசிரியர் ஆரோக்கியராஜை அறிமுகம் செய்து வைக்கிறார். "இது தனி முயற்சி இல்ல கூட்டு முயற்சி" எனப் பேச ஆரம்பிக்கிறார் ஆரோக்கியராஜ்.

"நான் இந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து 10 வருஷம் ஆச்சு. வேலைக்குச் சேர்ந்த புதிதில் பாழடைஞ்ச கட்டடமாகத்தான் இருந்துச்சு. காலையில் பள்ளிக்கு வரும்போது வகுப்புக்கு வெளியே ஆடு மாடு கட்டிப்போட்டு வெச்சிருப்பாங்க. நிறைய இடங்களில் சாராய பாட்டில்கள் கொட்டிக் கிடக்கும். காலையில் பள்ளிக்கு வந்ததும் பள்ளியைச் சுத்தப்படுத்தவே ஒரு மணிநேரம் ஆகும். பள்ளிக்கு மதில்சுவர்னு ஒண்ணு இல்லாதவரைக்கும் இந்த நிலையை மாத்த முடியாதுனு தோணுச்சு. அதனால் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் நிதி திரட்டி பள்ளிக்கு மதில்சுவர் கட்டினோம். பள்ளியின் மொத்த மதில் சுவரில் ஆசிரியர்களான நாங்களே பெயின்ட் செய்து, விதவிதமான படங்கள் வரைஞ்சு பள்ளியின் மொத்த தோற்றத்தையும் மாற்றினோம். பாடங்கள் சொல்லிக்கொடுக்கும் முறையிலும் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்துட்டு இருந்தோம். ஆனால், ஒவ்வொரு வருஷமும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைஞ்சுட்டே வந்துச்சு.

மாணவர்கள்
மாணவர்கள்
நிறைய பெற்றோர்களிடம் காரணம் கேட்டேன். எல்லோரும் சொன்ன ஒரு  விஷயம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேசத்தெரியல, குழந்தைகளோட திறன் முழுசா வெளிப்படுறது இல்லைனு சொன்னாங்க .அப்போ பிரச்னை பள்ளிகளில் இல்ல, நாம் கத்துக்கொடுக்கிறதில்தான் இருக்குதுங்கிற விஷயம் மனசுக்கு பட்டுச்சு. மாற்றத்தைக் கொண்டு வரணும்னு முடிவு எடுத்துச் செயல்பட ஆரம்பிச்சேன்.


கலாம் ஐயா மறைந்த நேரம், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருடைய கனவுத்திட்டமான 2020-ல் இந்தியா வல்லரசு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, எங்கள் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் மட்டும் ஒன்றாக இணைந்து ஒரு ஆல்பம் தயார் செய்தோம். அதற்கு செலவான 85,000 தொகையை நான் ஏத்துக்கிட்டேன். அந்த ஆல்பம் வெளிவந்த பிறகு நிறைய இடங்களில் இருந்து மக்கள் பள்ளிக்காக உதவ முன்வந்தாங்க.

தமிழ்நாட்டு அளவில் கணிப்பொறி ஆய்வகம் தொடங்கிய மூன்றாவது பள்ளி எங்களுடையதுதான்.
ஆசிரியர் ஆரோக்கியராஜ்
கிராம மக்கள், ஆசிரியர்கள், இளைஞர்களிடமிருந்து மொத்தமாக 1,72,000 ரூபாயை அரசு தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் கொடுத்து 5,16,500 திரும்பப் பெற்றோம். முதலில் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் செய்ய ஆரம்பிச்சோம். அந்தச் சமயத்தில்தான் அரசாங்கத்திடமிருந்து தேசிய அளவிலான கண்டுபிடிப்புகளுக்கான போட்டி குறித்த அறிவிப்பு வந்துச்சு. உண்மையைச் சொல்லனும்னா எங்க பள்ளியைச் சுத்திகரிக்கனு தனியா ஆளுங்க யாரும் இல்லை. அதனால் மாணவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து சைக்கிளின் இரு புறமும் பனை ஓலையைக் கட்டி சுத்திகரிச்சுட்டு இருந்தாங்க. அதையே கண்டுபிடிப்பு போட்டிக்குக் கொண்டு போனோம். யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பனை ஓலை வண்டி முதல் 20 வது இடத்துக்குள் வந்து பரிசுகளை வென்றது.

அந்த சாதனைக்குப் பிறகுதான் எங்களோட பள்ளி இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டுச்சு. ஜப்பானில் வாழும் இந்தியர் ஒருவர் பள்ளிக்காக 80,000 ரூபாய் கொடுத்து, மாணவர்களுக்குக் கணிப்பொறி கற்றுக்கொடுக்கச் சொன்னார். கூடுதலாக நிதி திரட்டி 25 கணிப்பொறிகளுடன்கூடிய ஒரு ஆய்வகத்தைத் தொடங்கினோம். கணிப்பொறி கற்றுக்கொடுக்க தனியாக ஒரு ஆசிரியர் தேவைப்பட்டார். அப்போ எங்கள் ஏரியாவில் இருக்கும் தொண்டு நிறுவனம் ஒன்று எங்கள் கணிப்பொறி ஆய்வகத்துக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்ய முன்வந்தாங்க. அதன் பிறகு, மாணவர்களுக்குக் கணிதத்தை செய்முறை விளக்கம் மூலமாகக் கணிப்பொறியில் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சோம். தமிழ்நாட்டு அளவில் கணிப்பொறி ஆய்வகம் தொடங்கிய மூன்றாவது பள்ளி நாங்கள்தான். ஆனாலும், குழந்தைகள் ஆங்கிலம் பேசாதது பெற்றோர்களுக்கு வருத்தமாகத்தான் இருந்துச்சு. அதனால் குழந்தைகளுக்கு முதலில் ஆங்கில உச்சரிப்புகளான பொனடிக்ஸைக் கற்றுக்கொடுக்கவும் ஆரம்பிச்சோம்.


அதன் பின் அமெரிக்காவில் வாழும் இந்தியரான கவிதா, குழந்தைகளுக்கு ஸ்கைப் மூலமாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்க தயாராக இருந்த தகவல் கிடைச்சது. அவரே பள்ளிக்குத் தேவையான ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கிக்கொடுத்தார். அமெரிக்காவில் இருக்கும் இந்தியர் மூலமாகத் தினமும் ஒரு வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் கொடுக்க ஆரம்பிச்சோம். ஒரு வருஷ பயிற்சி... இப்போ மாணவர்கள் எல்லாருமே ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவாங்க.


எங்களோட பள்ளியைப் பொறுத்தவரை ஆங்கில மீடியம், தமிழ் மீடியம் என எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லாருமே திறமையான மாணவர்கள்தாம் அவங்களை உருவாக்குவதில்தான் இருக்கு அவங்களோட வெற்றி என்பதை உறுதியாக நம்புறோம். தேசிய அளவிலான எந்தப் போட்டிகள் வந்தாலும் ஆசிரியர்களோட சொந்த செலவிலாவது மாணவர்களை அழைச்சுப் போயிட்டு இருக்கோம். பள்ளியின் சொந்த நிதியில் மாணவர்களுக்குத் திருக்குறள் வகுப்பு எடுத்துட்டு இருக்கோம். சொன்னா நம்பமாட்டீங்க எல்லா மாணவர்களுமே குறைந்தது 200 குறளை அசால்ட்டாக சொல்லுவாங்க'' என்கிறார்

அரசு இந்த வருஷம்தான் கே.ஜி வகுப்புகள் தொடங்கியிருக்கு. ஆனால், எங்கள் பள்ளியில் நாங்கள் போன வருஷமே நடைமுறைக்குக் கொண்டு வந்துட்டோம். எங்க பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து தனியாக ஒரு ஆசிரியரை நியமிச்சு போன வருஷமே கே.ஜி வகுப்புகளைச் சாத்தியப்படுத்தினோம். இந்த வருடம் எங்கள் பள்ளியில் மற்ற பள்ளிகளைவிட நிறையவே அட்மிஷன் போட்டு இருக்காங்க. பக்கத்து கிராமத்தில் இருந்துகூட அட்மிஷன் கேட்டு வந்துட்டு இருக்காங்க.

மாதம் ஒரு முறை பெற்றோர்கள் கூட்டம். பாரம்பர்ய கலைகளை வளர்க்கும் பள்ளி ஆண்டுவிழானு நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருச்சு. இந்தப் பள்ளி மாணவர்களுக்கான அடையாளத்தை மட்டுமல்ல, எனக்கான அடையாளத்தையும் கொடுத்திருக்கு.

அரசுப்பள்ளி
அரசுப்பள்ளி
அரசு கொண்டு வரும் திட்டங்களைத் தாண்டி மாணவர்களின் நலனுக்காக உழைக்க ஆரம்பித்தால் மாற்றம் தானாக நிகழும்" என்கிறார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive