கடலூர் மாவட்டம் கிள்ளையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏ.சி, ஸ்மார்ட் கிளாஸ், பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமிரா, தண்ணீர் வசதியுடன் கழிப்பறை, வாகன வசதி, தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி எனத் தனியார் பள்ளி போல் அசத்தி வருகிறது அரசு பள்ளி.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியான கிள்ளையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
சரியான கட்டட வசதி இல்லாமலும், இருக்கும் கட்டடமும் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வந்துள்ளது. கழிவறை, குடிநீர் உட்பட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்துள்ளன.
இதுபற்றி அறிந்த இப்பள்ளியில் படித்த முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தனது நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் உதவ புதிய கட்டடம், கழிவறை வசதி, சிசிடிவி கேமிரா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வர வேன் வசதி, தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி என இன்று தனியார் பள்ளி போல் ஹைடெக் பள்ளியாக மாறியுள்ளது.
ஸ்மார்ட் கிளாஸ்
கடந்த வருடம் கடலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு காமராஜர் விருதும் வாங்கியுள்ளது. இதுபற்றி பள்ளியில் படித்த கிள்ளை முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது, "கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்தித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் நிலை குறித்து கூறி மிகவும் வருத்தப்பட்டார்.
நான் உடனே நாம் படித்த பள்ளியைப் பெருமைப்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன். உடன் இப்பள்ளியில் படித்த நண்பர்கள் உறுதுணையுடன் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் சரி செய்யப்பட்டது.
பள்ளி வளாகத்தில் கழிவறை, நிழல் தரும் மரங்கள், காற்றோட்டமான விளையாட்டு மைதானம், சுற்றியுள்ள கிராம மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வேன் வசதி, பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமிரா, தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி எனத் தனியார் பள்ளிக்கு இணையாக நண்பர்கள் உதவியுடன் இந்தப் பள்ளியை உயர்த்தியுள்ளோம்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...