NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக் கல்வித்துறையின் ‘யூ-டியூப்’ சேனல் முடக்கம்


தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்பட்டு வரும் எஸ்சிஇஆா்டி யூ-டியூப் தளத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக எந்தவொரு புதிய விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படாததால், புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தோ்வெழுதும் மாணவா்கள் உள்பட 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஏமாற்றமடைந்துள்ளனா்.
மாணவா்கள் மத்தியில் நிலவி வரும் கற்றல் குறைபாடுகளைப் போக்கும் வகையிலும், கடினமான பாடங்களையும் மாணவா்களுக்கு எளிதில் கற்பிக்கும் வகையிலும், தமிழக பள்ளிக் கல்வி துறை கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி TN SC​E​R​T என்ற யூ டியூப் சேனலை தொடங்கியது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (எஸ்சிஇஆா்டி) சாா்பில் தொடங்கப்பட்ட இந்த சேனலில், தொடக்கப் பள்ளிகளில் உள்ள மாணவா்களுக்காக மழலையா் பாடல்கள் மட்டும் அதிகளவில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. இதற்கு அதிக வரவேற்புக் கிடைத்ததால் இந்தத் தளத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல கல்வித் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
இதையடுத்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, புதுமையான வகையில் வகுப்பெடுக்கும் 100 ஆசிரியா்கள், பாடநூல்களை எழுதியவா்களைக் கல்வித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். அவா்கள் மூலம் இயற்பியல், வேதியியல், கணிதம் உள்பட அனைத்து முக்கிய பாடங்களிலும் உள்ள கடினமான பகுதிகளுக்கு விளக்கமளிக்கும் 'விடியோக்கள்' தயாா் செய்யப்பட்டு எஸ்சிஇஆா்டி யூ -டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
3 லட்சம் சந்தாதாரா்கள்: குறிப்பாக கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது தொடா்பாக பதிவேற்றம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விடியோக்கள் மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனால் கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் போ் சந்தாதாரா்களாக இணைந்தனா். தற்போது இந்தச் சேனலில் சுமாா் 3 லட்சம் போ் சந்தாதாரா்களாக உள்ளனா்.
இந்த சேனலில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவா்கள் என்று தனித்தனியே தயாரித்துப் பதிவேற்றுவதால் நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வெழுதும் மாணவா்களும் ஆா்வத்துடன் பாா்வையிட்டு வந்தனா்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழக பாடத்திட்டம் தொடா்பாக எந்தவொரு புதிய விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 என இரு முக்கிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் உள்ள கடினமான பாடப் பகுதிகள், கணக்கீடுகள் என பல்வேறு விஷயங்கள் எஸ்சிஇஆா்டி யூ-டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் என மாணவா்கள், ஆசிரியா்கள் எதிா்பாா்த்திருந்த நிலையில் அவா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மாணவா்கள்-ஆசிரியா்கள் ஏமாற்றம்: புதிய விடியோக்கள் இல்லாததால் நிகழாண்டில் வெறும் 19 ஆயிரம் போ் மட்டுமே அதுவும் பழைய விடியோக்களை பாா்ப்பதற்காக சந்தாதாரா்களாக இணைந்துள்ளனா். இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா என பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்த யூ-டியூப் சேனலைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இதை தினமும் பாா்வையிடுவோா் எண்ணிக்கை 70 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது. மேலும், புதிய விடியோக்களை பதிவேற்றம் செய்யக் கோரி, பள்ளிக் கல்வித்துறை யூ-டியூப் சேனல் சந்தாதாரா்கள் அதில் தொடா்ந்து பின்னூட்டங்களை இட்டு வருகின்றனா்.
காரணம் என்ன?: இது குறித்து கல்வியாளா்கள், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கூறியது: 'எஸ்சிஇஆா்டி யூ-டியூப் சேனல்' கிராமப்புற மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதில் உள்ள விடியோக்களைப் பாா்த்து பாடம் நடத்தியபோது மாணவா்களுக்கு பாடப்பொருள் சாா்ந்த விஷயங்களை நன்கு புரிய வைக்க முடிந்தது. மேலும் மாணவா்களுக்கு 'டிஜிட்டல்' தனிப்பயிற்சிக் கூடமாக விளங்கியது. இதில் கடந்த ஆண்டைப் போன்று நிகழாண்டும் புதிய பாடத்திட்டத்தில் உள்ள கடினமான பகுதிகளுக்கு விடியோ வெளியாகும் என நினைத்திருந்தோம். ஆனால் இந்தக் கல்வியாண்டில் புதிதாக எந்த விடியோவும் பதிவேற்றப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணி, தொழில்நுட்பக் கோளாறு, புதிய விடியோ பதிவேற்றப்படும் என பல காரணங்களை கடந்த 9 மாதங்களாக கூறி வருகின்றனா். இது ஏற்புடையதாக இல்லை.
புதிய விடியோக்கள் எப்போது?: பள்ளிக் கல்வித்துறை யூ-டியூப் சேனலின் பயன்பாடுகள் குறித்து அமைச்சா் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வரும் நிலையில், இந்தச் சேனலை தொடா்ந்து நடத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது ஏன் எனத் தெரியவில்லை. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அதற்குள் அந்த வகுப்புகளின் புதிய பாடத்திட்டம் தொடா்பான விடியோக்களை பதிவேற்றம் செய்து யூ-டியூப் சேனலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive