Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

தமிழே, தாயே வணக்கம். அமிழ்தம் நீ என்கிறோம். உம்மொழி செம்மொழி என்கிறோம். உம்மை எங்கள் உயிர் என்கிறோம். உம்மொழியைக் காதில் கேட்டால், தேன்வந்து பாயுது என்கிறோம்.
இதுபோன்று நம் தமிழ்மொழியின் மேன்மையை, சிறப்பை, இனிமையை, அழகை சங்க இலக்கியங்களும், ஐம்பெருங்காப்பியங்களும், பன்னிரு திருமுறைகளும், தமிழ்விடுதூது போன்ற சிற்றிலக்கியங்களும் எடுத்துக் கூறியுள்ளன.
இத்தகு பெருமைக்குரிய தமிழ்மொழி இன்றைய மேடைகளிலே, ஊடகங்களிலே தவறாக உச்சரிக்கப்படுகிறது. தமிழ்மொழியின் உச்சரிப்பு ஒலி சீர்குலைந்துள்ளது.குறிப்பாக, காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்கள், செய்தியாளர்கள், "மாடரேட்டர்ஸ்' உள்ளிட்டோரின் லகர, ழகர, ளகரத் தமிழ் உச்சரிப்பு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. குறைந்தபட்சம், சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்களை அதுபோன்ற பணிகளில் அமர்த்த வேண்டும் என்கிற பொறுப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
மேடையில் பேசும் இன்றைய இளைய தலைமுறைகளும் சரி, பலருக்குத் தமிழ் எழுத்துகளின் சரியான உச்சரிப்பு வருவதில்லை.
பொதுவாக உச்சரிப்பில் தவறு செய்பவர்களுக்கு அவர்கள் பிழை அவர்களுக்கே தெரியாது. தெரிந்திருந்தால் அவர்கள் மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யக்கூடும்.
பள்ளியில் படிக்கும்பொழுதே ல, ள, ழ - ந, ண, ன - ர, ற - என்ற எழுத்துகளை உச்சரிக்கும்பொழுது, சரியாக உச்சரிக்கப் பழக்க வேண்டும். சிறுவயதில் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாகப் பேசவைத்தும், படிக்க வைத்தும் பள்ளிப்பருவத்திலேயே சரியாகக் கற்றுக் கொடுத்தால், பிழை நிச்சயமாக வராது. எனவேதான், "இளமையில் கல்' என்று ஒளவையார் சொல்லியிருக்கிறார்.
சரி! சிறுவயதில் பள்ளிப் பருவத்தில் சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொள்ளவில்லை... அவர்கள் பெரியவர்களானதும் நாக்கு மடியவில்லை என்றால், அவர்களை என்ன செய்யலாம் என்றால், ஒவ்வொருவரும் வாய்விட்டுச் சத்தமாகப் படிக்க வேண்டும் அல்லது பேச வேண்டும். அதை ஒலிப்பதிவு செய்து தாங்களே கேட்க வேண்டும். கேட்கும்பொழுது பிழை நிச்சயமாகத் தெரியும், உடனே மாற்றிக் கொள்ளலாம்.
இது அறிவியல் வளர்ந்த காலம். கருவிகள் மூலமே கண்டுபிடித்து, கருவிகளைக் கொண்டே சரியாகப் பயிற்சி செய்தும் பயிற்சி பெறலாம். வளர்ந்த நிலையில் இருக்கக்கூடிய ஒருவரிடம், உங்கள் உச்சரிப்பு சரியில்லை என்று சொன்னால் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது.
தமிழாசிரியர்களுக்கும், மேடையில் ஏறிப் பேசும் மாணவர்களுக்கும், தமிழில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கும் உச்சரிப்புப் பயிற்சி கொடுக்க வேண்டும். உச்சரிப்பில் குழப்பம் தரும் இடங்கள் மூன்று. அவை:
1. ல, ள, ழ; 2.ண, ந, ன; 3. ர, ற. இவ்வெழுத்துகளைத் தவறாக உச்சரித்தாலும், ஓர் எழுத்துக்குப் பதிலாக வேறோர் எழுத்தை எழுதினாலும் பொருளே மாறுபடும். விபரீதமான பொருளும் உண்டாகும். எனவே, இவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
ல, ள, ழ, ண, ந, ன, ர, ற எழுத்துகள் பிறக்கும் இடம்:
லகரம் - மேல்வாய் முன் பல்லின் உட்பகுதியை நுனி நாக்கு லேசாகப் பொருந்தும்போது "ல' பிறக்கும். (எ.கா.) பல, வால், மலர்.
ளகரம் - நாவின் ஓரம் தடித்து நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து, மேல் அண்ணத்தின் நடுப்பாகத்தைத் தடவுவதால் "ள' பிறக்கும். (எ.கா) வாள், கள், முள்.
ழகரம் - உள்நாவின் அருகில் நாநுனி மேல்நோக்கி வளைந்து வருடலால் "ழ' பிறக்கும். (எ.கா) வாழை, வாழ், தமிழ்.
ணகரம் - நுனிநா மேல்வாய் நுனியைச் சேர்தலால் "ண' பிறக்கும். (எ.கா) கண், மண், பண்.
நகரம் - மேல் வாய்ப் பல்லின் அடியை நுனிநா பொருந்துவதால் "ந' பிறக்கும். (எ.கா) நகம், நாளை, நன்மை.
கரம் - நுனி நாக்கு மேல்வாய் முன்பற்களுக்கு மேல் மிகப் பொருந்துவதால் "ன' பிறக்கும். (எ.கா.) பொன், மன்னன், அன்னம்.
ரகரம் - நாவின் நுனி மேல்வாய்ப் பற்களுக்கு மேலே மெல்லத் தடவினால் "ர' பிறக்கும். (எ.கா.) மரம், அரம், கரை.
றகரம் - நுனிநா நுனி அண்ணத்தை நன்றாகப் பொருந்தி வெளிவருவதால் "ற' பிறக்கும். (எ.கா) அறம், மறம், கறை, பிறை.
இவ்வாறாக எழுத்துகள் பிறக்கும் என்ற இலக்கணத்தைச் சொல்வதால் எல்லோராலும் பின்பற்றுதல் எளிமை என்று நினைத்து விடக்கூடாது. சிக்கலான எல்லா எழுத்துகளும் வரும்படியான வார்த்தைகளைப் பேசிப் பேசி பயிற்சி பெறலாம்.
"வாழைப் பழத்தோல் வழுக்கிக் குழந்தை சாலையில் விழுந்தாள்'; "அன்னப்பறவை தண்ணீரை நீக்கிப் பாலை அருந்தியது'; "மரத்தை அறுக்கும் கருவிகள்' - இப்படிப் பல தொடர்களை உருவாக்கிப் பயிற்சிகள் கொடுத்தால் தமிழும் சிறக்கும், ஒலிப்பும் இனிமையாகும்.
- முனைவர் விஜயலட்சுமி இராமசாமி

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments