மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு நாடு முழுவதும் 2,400 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 8) நடைபெற உள்ளதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். அதன்படி மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வை (‘சிடெட்’ ) ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. ‘சிடெட்’ மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல்தாளில் தோ்ச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தோ்ச்சி அடைபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். அதன்படி நடப்பாண்டுக்கான ‘சிடெட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) நடைபெறுகிறது.
இந்தத் தோ்வை சுமாா் 15 லட்சம் வரையான பட்டதாரிகள் எழுதவுள்ளனா். இதற்காக நாடு முழுவதும் 110 நகரங்களில் 2,400 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘சிடெட்’ தோ்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 20 மொழிகளில் நடைபெறும். இதில் தோ்ச்சி அடைய குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். தோ்ச்சி பெறுபவா்கள் 7 ஆண்டுகள் வரை அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர முடியும். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...