தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், வரும் கல்வி
ஆண்டில், மாணவர்களை சேர்க்க, அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் என்ற, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில்,
பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கட்டடவியல் வல்லுனர்கள் அடங்கிய
குழுவினர், கல்லுாரிகளின் உள்கட்டமைப்பை ஆய்வு செய்து, அங்கீகாரம்
வழங்குகின்றனர்.
இதையடுத்து, அண்ணா பல்கலை சார்பில், கல்லுாரியின் ஆய்வகம், பாடத்திட்டம், பாடப் பிரிவுகள், வகுப்பறை, குடிநீர், கழிவு நீர் வசதி, விடுதி வசதி, பேராசிரியர்களின் எண்ணிக்கை, கல்வி தகுதி ஆகியவற்றை ஆய்வு செய்து, இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அங்கீகாரம் வழங்கும் முன், சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளின், தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, அகில இந்திய தனியார் கல்லுாரி பணியாளர்கள் சங்கத்தின் நிறுவனர், கார்த்திக், தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு, கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:அங்கீகாரம் வழங்கும் முன், சம்பந்தப்பட்ட கல்லுாரியின் கல்வித் தரம், அடிப்படை வசதி, நிர்வாகம் குறித்து மாணவர், பெற்றோரின் கருத்துகளை பெற வேண்டும்.அத்துடன், கல்லுாரி தரப்பில் தாக்கல் செய்த விபரங்களையும் இணைத்து அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இதையடுத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் பேராசிரியர்களின் ஆட்சேபனை இல்லாத நிலையில், அங்கீகாரம் வழங்க வேண்டும். கல்லுாரியின் தகவல்கள் தவறாக இருந்தால், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...