டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் துறை அதிகாரிகளுக்குத் தொடர்பில்லை என உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்பி முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 19) இந்த வழக்கில் சிபிசிஐடி ஏடிஜிபி சார்பில் சிபிசிஐடி டிஎஸ்பி ஆர்.சந்திரசேகரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரம், கீழக்கரை தாலுகா மையங்களில் குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் ஜனவரி 23-ல் வழக்கு பதிவு செய்தது.
விசாரணையில் இந்த முறைகேட்டை டிஎன்பிஎஸ்சி ஆவண எழுத்தர், தட்டச்சர் ஆகியோரின் உதவியுடன் தனிநபர்கள் செய்திருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் 2017-ல் குரூப் 2 ஏ தேர்விலும், 2016 விஏஓ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2019 குரூப் 4 முறைகேடு தொடர்பாக 25 பேர், குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 29 பேர், விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வுகளில் முறைகேடாக 84 பேர் வெற்றிப்பெற்றுள்ளனர்.
முறைகேடு செய்து வெற்றிப்பெற்று அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் தனித்தனியாக அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் டிஎன்பிஎஸ்சி கீழ் நிலை ஊழியர்கள் உதவியுடன் முறைகேடு நடைபெற்றுள்ளது. டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு முறைகேட்டில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் சிலர் பணியில் மெத்தனமாக இருந்துள்ளனர். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு முக்கிய கட்டத்தில் உள்ளது. சிபிசிஐடி போலீஸார் நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரித்து வருகின்றனர். விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே சிபிஐ-க்கு விசாரணைக்கு மாற்ற வேண்டியதில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...