உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்று நோய் என அறிவிக்கப்பட்ட கொரோனா
வைரஸ் நோய், இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் வேகமாக பரவி
வருகிறது. இந்த விஷயத்தில் அச்சமோ, பதற்றமோ தேவையில்லை; நிதானமும்,
விழிப்புணர்வும் தான் தேவை என்பதை உணர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை
தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும்
மழலையர் வகுப்புகளுக்கும், சில மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரையிலும்
விடுமுறை விடப்படுள்ளது.
கொரோனா வைரஸ் நோயை தடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உணர்வும், அந்த விஷயத்தில் காட்டும் அக்கறையும் பாராட்டத்தக்கவை என்பதில் ஐயமில்லை. ஆனால், அதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழுமையானவை அல்ல.
கொரோனா வைரஸ் நோயை காற்றிலோ, நீரிலோ பரவுவதில்லை; மாறாக மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மனிதர்களை கை குலுக்குவது உள்ளிட்ட செயல்களின் மூலம் தொடுவதாலோ அல்லது 3 அடிக்கும் குறைவான தொலைவு இடைவெளியில் நெருங்கி இருப்பதாலோ தான் கொரோனா வைரஸ் நோய் பரவுவதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. மனிதர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என்பது தான் கொரோனாவை தடுப்பதற்காக முன்வைக்கப்படும் முதன்மை அறிவுரையாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவுரைப்படி தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், சந்தைகள், மாநாடுகள், திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும், இடங்களையும் மூட வேண்டும். அப்போது தான் கொரோனா வைரசை தடுக்க முடியும். அதற்கு மாறாக மழலையர் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பது போதுமானதல்ல. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகத்திலும், தில்லியிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. மராட்டியத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களைத் தாண்டி, உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தமது குஜராத் பயணத்தை ரத்து செய்துள்ளார். இவற்றையெல்லாம் கடந்து கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கத்துடன் மயிலாடுதுறையில் இன்று நடைபெறவிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பாராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பில் இத்தகைய எச்சரிக்கை உணர்வும், ஒத்துழைப்பும் தமிழக அரசுக்கும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேண்டும்; அதுதான் இன்றைய கட்டாயத் தேவை.
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் நேற்றிரவு வெளியிட்ட அறிவுரைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. ''கொரோனா வைரஸ் நோய்த்தடுப்புக்கு விரிவான அணுகுமுறையை அனைத்து நாடுகளும் கடைபிடிக்க வேண்டும். ஆய்வு நடத்துவதை மட்டுமோ, தனிமப்படுத்துவதை மட்டுமோ, பாதிக்கப்பட்டவர்களை சமூக அளவில் ஒதுக்கி வைப்பதை மட்டுமோ, அவர்கள் சென்ற இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வதை மட்டுமோ செய்தால் போதாது. மாறாக இந்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளின் அனுபவத்தை பார்த்து விட்டு, அத்தகைய நிலை தங்களுக்கு ஏற்படாது என்று ஏதேனும் நாடுகள் நினைத்தால் அவை மிக மோசமான தவறை செய்கின்றன என்று பொருள்'' என உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கையை அரசு அலட்சியப்படுத்தக்கூடாது; கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் இதுவரை ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். அவரும் இப்போது குணமடைந்து விட்டார். அதை நினைத்து தமிழக அரசு அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஏனெனில், கொரோனா வைரஸ் எவரும் எதிர்பார்த்திராத வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை இருவர் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ளனர். 83-க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர். கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளம், தமிழகத்திற்கு மிக அருகில் உள்ளது. அண்மையில் கேரளத்துக்கு சென்று வந்த அரக்கோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கேரளத்திலிருந்து ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர் எனும் நிலையில், மக்கள் கூடுவதை தடுக்க இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மக்கள் கூடுவதை தடுக்கும் ஒரு கட்டமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிகவளாகங்களை மூட அரசு ஆணையிட வேண்டும். அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுடனான எல்லைகளை தற்காலிகமாக மூடுவதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...