கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் மாநில தலைமைச் செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அந்தக் கூட்டத்தில்,
* புறநகர் ரயில்கள் உள்ளிட்ட அனைத்து விதமான ரயில்சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதிலிருந்து சரக்கு ரயில்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
* அனைத்து விதமான மெட்ரோ ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதுதொடர்பான அறிவிப்பை மாநில அரசுகள் வெளியிடும். (தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது)
* நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 75 மாவட்டங்களில் அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்றவைகளைத் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பை மாநில அரசுகள் வெளியிடும்.
* மாநிலங்கள் இடையிலான போக்குவரத்துக்கும் வரும் 31ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தநிலையில், லாக் டவுன் அறிவிப்பு குறித்த 75 மாவட்டங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதேபோல், புதுச்சேரியின் மாஹே மாவட்டமும் இருக்கிறது.
டெல்லி மொத்தமாக முடக்கப்படுகிறது. நாளை காலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி நள்ளிரவு வரை லாக்டவுன் அமலில் இருக்கும் என்று டெல்லி அரசு அறிவித்திருக்கிறது. லாக் டவுன் காலத்தில் மக்கள் எதற்கெல்லாம் அனுமதிக்கப்படுவார்கள்? எதெற்கெல்லாம் அனுமதியில்லை என்பது குறித்து டெல்லி அரசு சில வழிமுறைகளை உத்தரவாகப் பிறப்பித்திருக்கிறது.
அதன்படி,
* டாக்ஸி, ஆட்டோ, உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்க அனுமதிக்கப்படாது. அதேநேரம், குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்.
* அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், குடோன்கள், வாராந்திர சந்தைகள் உள்ளிட்டவைகள் இயங்க அனுமதியில்லை.
* அண்டைமாநிலங்களான ஹரியானா, உத்தரப்பிரதேச எல்லைகள் மூடப்படும்.
* இந்த காலகட்டத்தில் டெல்லி வரும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்படும்.
* எந்தவிதமான கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதியில்லை.
* அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்படும்.
* மக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமன்றி மற்ற நேரங்களில் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பது குறித்தும் டெல்லி அரசு பட்டியலிட்டுள்ளது.
* போலீஸ்
* சுகாதாரத்துறை
* தீயணைப்புத் துறை
* சிறைத்துறை
* பொதுவிநியோகத் துறை
* மின்சாரத்துறை
* குடிநீர் வழங்கல் துறை
* முனிசிபால் சர்வீஸஸ்
* டெல்லி சட்டப்பேரவை இயங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள்.
* கருவூலத் துறை
* பத்திரிகைத் துறை
* வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாடு தொடர்பான ஊழியர்கள்
* தொலைதொடர்புத் துறை, இன்டர்நெட் மற்றும் தபால் சேவை
* உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பான அனைத்து சேவைகள்
* உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் (பழங்கள், காய்கறிகள், பால், பேக்கரி, இறைச்சி, மீன் உள்ளிட்டவைகள்)
* பெட்ரோல் நிலையங்கள்
* உணவகங்கள்
* மளிகைக் கடைகள்
* மெடிக்கல்
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி மேற்கூறியவைகள் தொடர்பான கடைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* அத்திவாசியப் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்படுகிறது (தனிப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில்).
* சட்டத்தின்படி எந்தவொரு இடத்திலும் 5 அல்லது அதற்குமேற்பட்ட நபர்கள் கூட அனுமதி மறுக்கப்படுகிறது.
* தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் வேலைக்கு வந்ததாகக் கருதி முழு ஊதியம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
என்று டெல்லி அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் என்ன நிலை என்பது குறித்து அறிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம். இதுதொடர்பான முடிவுகள் நாளை காலையில் உயரதிகாரிகள் கூடி ஆலோசித்த பின்னரே எடுக்கப்படும் என்று கூறிய அவர், ``அதற்கு முன்பாக இதுகுறித்து பேசுவது சரியாக இருக்காது. எனவே, அந்தக் கூட்டத்துக்குப் பின்னர் அதுகுறித்த தகவல்களை அளிக்கிறேன்’’ என்று கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...