பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது மாணவர்களுக்கு வேண்டுமானல் இனிப்புச்
செய்தியாக இருக்கும் - ஆனால் பெற்றோர்- ஆசிரியர்களுக்கு மிகுந்த
கவலைக்குரிய செய்தியாகத்தான் இருக்கும். அதுவும் பள்ளி இறுதி ஆண்டுத்
தேர்வுகள் நடைபெற வேண்டிய வேளையில், பாடங்கள் நடத்தமுடியாமல், காலவரையறை
நிர்ணயிக்க முடியாத அச்சம் மிகுந்த சூழலை (உலகம் முழுவதும்)
ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா.
தற்போதைய நிலவரப்படி, 102 நாடுகள்- நாட்டிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி -
பல்கலைக்கழகங்கள் என அனைத்தையும் மூடியிருக்கின்றன. பதினொரு நாடுகள்
நாட்டின் சில பகுதியிலுள்ள கல்வி நிலையங்களை மட்டும் மூடியிருக்கின்றன.
இதனால் உலகம் முழுவதுமுள்ள மாணவர்தொகையில் பாதி (850 மில்லியன்)
மாணவர்களைக் கல்வி நிலையங்களை விட்டு விலகியிருக்கச் செய்திருக்கிறது
கொரோனா. இது இன்னும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கல்வியில் தொய்வு வந்துவிடக்கூடாது என்பதற்காக சில நாடுகள்
தொலைதூரக்கல்வியினை இன்றைக்குள்ள தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ( ஆன்லைன்
வகுப்புகள், தொலைக்காட்சி - ரேடியோ) பாடங்களை எடுக்கலாம் என்று யோசிக்கத்
தொடங்கியிருக்கின்றன. இருப்பினும் பள்ளிகள் எப்போது மீண்டும் தொடங்கப்படும்
- தொலைதூரக்கல்விக்கான தயாரிப்புகள் / திட்டமிடல் எத்தனை நாள்களுக்கு
என்பது குறித்து ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது.
இதற்கிடையில், திடீரென கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்படுவதைக்
கவனத்தில் எடுத்துக்கொண்டு, கல்விக்கான மாற்றுத் தீர்வுகாண யுனெஸ்கோ, ‘உலக
கொவிட்-19 கல்விக் கூட்டணி’ என்றொரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு களத்தில்
இறங்கியிருக்கிறது.
உடனடியாக உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களுடன் மார்ச்-10ம் தேதி ஒரு வீடியோ
கான்ஃபெரன்சிங் நடத்தி, அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக்
கேட்டறிந்துள்ளது யுனெஸ்கோ. இதில் சீனா, க்ரோஷியா, எகிப்து, ஃப்ரான்ஸ்,
இத்தாலி, லெபனான், மெக்ஸிகோ, நைஜீரியா, ஜப்பான், கொரியா மற்றும் ஈரான் ஆகிய
நாடுகள் பங்கேற்று தமது கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றன.
இறுதியாக இதில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை யுனெஸ்கோ பட்டியலிட்டு ஆலோசனை கேட்டிருக்கிறது.
பள்ளிக்கூடம் என்ற ஒன்றைத் தவிர கற்பதற்கு வேறு ஆதாரமில்லாத, சமுதாயத்தில்
பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு எப்படி உதவப்போகிறோம்.?
பள்ளிக்கூடம் மூலம் மட்டுமே மதிய உணவு பெற்று பசி நீங்கிக் கற்றுவந்த மாணவர்களுக்கு என்ன மாற்று செய்யப்போகிறோம்?
பள்ளிக்கூடங்கள் கல்வி வழங்குவதைக் காட்டிலும் பல
சிறுவர்கள்/இளைஞர்களுக்குப் பாதுகாப்பையும் வழங்கிக்கொண்டிருக்கிறது.
தற்போது பள்ளிகள் மூடிய நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்கு எப்படி
உத்திரவாதம் வழங்கவிருக்கிறோம்?
பெருவாரியான பெற்றோர்களுக்கு இதுபோல தொலைதூரக்கல்வி / வீட்டுக்கல்வி பற்றிய
விழிப்புணர்வு இல்லாத நிலையில் அவர்கள் எப்படி மாணவர்களுக்கு உதவுவார்கள்?
சமூகத்தில் பின் தங்கியுள்ள சூழலில் வாழும் எத்தனை கோடி மாணவர்களுக்கு
இந்தத் தொலைதூரக்கல்வி சாத்தியமாகும்? அவர்கள் வாழும் இடத்தில் எல்லாம்
இண்டெர்நெட், கம்ப்யூட்டர் போன்ற தொழில்நுட்ப உதவி முழுவதுமாகக்
கிடைக்கிறதா?
பணிக்குச் செல்லும் பெற்றோர்களால் இது போன்ற தொலைதூரக்கல்வி முறைக்கு உதவ
முடியுமா? இதற்காக அவர்கள் விடுப்பு எடுக்க நேர்ந்தால் அவர்களுக்கு
ஏற்படும் பொருளாதார இழப்பினை எப்படி ஈடு செய்வது?
மாணவர்களின் இடை நிற்றல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதா?
இதுபோல இன்னும் பல கேள்விகளை முன் வைத்திருக்கிறது.
இந்தக் கல்விக் கூட்டணியில் நமது அரசு(கள்) ஏதும் கலந்துகொண்டிருக்கிறதா??
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...