‘ரயில்வேயில்
காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களுக்கான பணியாளர் தேர்வு, டிசம்பர்
15ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும்,’ என ரயில்வே வாரியம்
அறிவித்துள்ளது. ரயில்வேயில் காலியாக உள்ள 1 லட்சத்து 40 ஆயிரத்து 640
பணியிடங்களை நிரப்ப, ரயில்வே வாரியம் இந்தாண்டு ஆரம்பத்தில் முடிவு
செய்தது. இதற்காக விண்ணப்பங்களையும் வரவேற்றது. பெறப்பட்ட விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டன. பின்னர், போட்டித் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள்
நடந்து வந்த நிலையில், கொரோனா குறுக்கிட்டது. இதனால், இந்த தேர்வு
கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, கொரோனா ஊரடங்குகள்
தளர்த்தப்பட்டு, நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
இதையடுத்து, இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை, கொரோனா
ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்த ரயில்வே வாரியம் முடிவு
செய்துள்ளது. இது பற்றி ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே. யாதவ் நேற்று
அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘ரயில்வேயில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள
ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 640 பணியிடங்களுக்கு, மொத்தம் 2 கோடியே 42 லட்சம்
விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு
நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தி
வைக்கப்பட்ட இந்த போட்டித் தேர்வை, டிசம்பர் 15ம் தேதி முதல் நடத்த
தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை நேரடியாக நடத்தப்படாமல், கம்யூட்டர்
மூலமாக ஆன்லைனில் நடத்தப்படும். இதற்கான விரிவான தேர்வு பட்டியல் விரைவில்
வெளியிடப்படும்,’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...