நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட 9 பள்ளிகள் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவுசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளி கட்டணம் வசூலிக்க கூடாது என்று ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்துதான் தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, கடந்தாண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 70 சதவீதத்தை வசூலித்து கொள்ளலாம் என்றும் அதில் 40 சதவீத கட்டணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள்ளும், மீதமுள்ள தொகையை 2 மாதங்களுக்கு பிறகு வசூலித்து கொள்ளலாம் எனவும் கடந்த ஜூலை 17ம் தேதி குறிப்பிட்டிருந்தார்.
அதன் பிறகு முதல் தவணை செலுத்துவதற்கான கால கெடுவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் கே.ஜெயலலிதா கூடுதல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அதில் 9 பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோர்களை நிர்பந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த அறிக்கையின் அடிப்படையில் அந்த 9 பள்ளிகள் மீதும் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும் அவமதிப்பு வழக்கு குறித்து சம்மந்த பள்ளிகளின் தாளாளர் வருகிற அக்டோபர் 14ம் தேதி பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். தொடர்ந்து, சி.பி.எஸ்.சி., பள்ளிகளுக்கு எதிராக எந்த வித புகாரும் வரவில்லை என சிபிஎஸ்சி வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து குழந்தைகளின் நலன் கருதி தனியாக மின் அஞ்சல் முகவரியை உருவாக்கி அது குறித்து விரிவாக விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...