கொரோனா தொற்று காரணமாக, பல்கலை மற்றும் கல்லுாரிகளின், 'செமஸ்டர்' தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு செமஸ்டர் பாடங்களைத் தவிர, மற்ற அனைத்து பாடத் தேர்வுகளுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.
ஆட்சேபம்
மேலும், ஏப்ரல், மே தேர்வில், அரியர் பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால், தேர்வு எழுதாமலே தேர்ச்சி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.அரியர் தேர்ச்சி அறிவிப்புக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து, அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அப்பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதேபோல், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுதே, அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவு, அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரம், தமிழக உயர் கல்வித் துறைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படியே, அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி முடிவு அறிவிக்கப்பட்டதாக, தமிழக அரசு அறிவித்தது.இதற்கிடையில், அரியர் பாடங்களில் தேர்ச்சி வழங்கினாலும், அந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது. அதேபோல், ஆல் பாஸ் பெற்ற மாணவர்களை, உயர் கல்வியில் சேர்க்க, மற்ற கல்வி நிறுவனங்கள் தயங்கும் என, கூறப்படுகிறது.
ஆலோசனை
எனவே, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அனைவருக்கும் தேர்ச்சி முடிவை மாற்றுவது குறித்து, தமிழக உயர் கல்வித் துறை ஆலோசனை மேற் கொண்டுள்ளது.இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., - யு.ஜி.சி., மற்றும் என்.பி.ஏ., எனப்படும், தேசிய தர மதிப்பீட்டு அமைப்பு ஆகியவற்றின் விதிகளை, உயர் கல்வித் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல, தமிழக சட்டத் துறை வழியாக, சட்ட நிபுணர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளன. எனவே, விரைவில் ஆல் பாஸ் முடிவில் மாற்றம் இருக்கும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரத்து செய்யலாம்
கலை மற்றும் அறிவியல் படிப்புகளிலும், இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்ட் படிப்புகளிலும், இறுதியாண்டில் செமஸ்டர் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மட்டும், அனைவருக்கும் தேர்ச்சி அறிவிப்பை ரத்து செய்யலாம் என, கூறப்படுகிறது.இறுதியாண்டு அரியர் பாடங்களுக்கு, மீண்டும் தேர்வு நடத்தலாம் என்றும், உயர் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அங்கு தமிழக அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...