தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்காக குழந்தைகள் மீது ஆன்லைன் வகுப்புகளை திணிப்பது முட்டாள்தனமானது; மனித உரிமை மீறல் ஆகும். உயிர்களை பறிக்கிறது; ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது என்பதால் ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கு மாறாக, மன அழுத்தத்தையும், தற்கொலை எண்ணத்தையும் வளர்த்து வருகின்றன என்பதை கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்வுகள் உறுதி செய்துள்ளன. சுகமாக இருக்க வேண்டிய கல்வியை சுமையாக மாற்றி வரும் ஆன்லைன் வகுப்புகள் ஊக்குவிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி, தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் அரசு பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு இத்தகைய வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்கள் ஒரு வழி உரையாடல் என்பதாலும், அதை பின்பற்றுவதற்கு கட்டாயமில்லை என்பதாலும் அரசு பள்ளி மாணவர்கள் விவகாரத்தில் இதுவரை எதிர்மறைத் தாக்கங்கள் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பான்மையினரால் ஆன்லைன் வகுப்புகளை எதிர்கொள்வது என்பது பொருளாதாரம் சார்ந்தும், புரிதல் சார்ந்தும் பெரும் போராட்டமாக மாறியிருக்கிறது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்கு குறைந்தபட்சம் தரமான செல்பேசியில் தொடங்கி அதிகபட்சம் மடி கணிணி வரை தேவைப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 2 அல்லது 3 குழந்தைகள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் இத்தகைய கருவிகள் தேவை. தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை படிக்க வைக்க கடன் வாங்கி கட்டணம் செலுத்தும் ஏழை பெற்றோரால் புதிய செல்பேசியோ, மடிகணிணியோ வாங்கித் தர முடியாத நிலையில், அவர்களால் எப்படி கல்வி கற்க முடியும்? ஆன்லைன் கல்வி முறை கல்வி வழங்குவதற்கு பதிலாக மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது.
கல்வி வழங்கப்படுவதன் நோக்கமே ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமநிலை சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், அந்த கல்வியைக் கற்பிப்பதற்கான முறையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றால், அந்த முறையை குப்பையில் வீசி எறிவது தான் சமூகநீதியாகவும், சமநீதியாகவும் இருக்கும். இவற்றையெல்லாம் கடந்து ஆன்லைன் வகுப்புகள் முறையாக கற்பித்தல் முறையே அல்ல. வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்படும்போது, மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை
ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெற முடியும். ஆன்லைன் வகுப்புகளில் பெரும்பாலான நேரங்களில் மாணவர்கள் ஐயம் கேட்க ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை. சில ஆசிரியர்கள் யு&ட்யூப் இணையத்தில் உள்ள கற்பித்தல் காணொலிகளை ஒளிபரப்பி அத்துடன் தங்கள் கடமையை முடித்து கொள்கின்றனர். இத்தகைய ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதும் ஒன்று தான்.... நடத்தப்படாமல் இருப்பதும் ஒன்று தான்.
ஆன்லைன் வகுப்புகளுக்கான வசதிகள் இல்லாததாலும், பாடங்கள் புரியாததாலும் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மேற்கு நன்னாவரத்தில் ஒரே செல்பேசியை ஆன்லைன் வகுப்புகளுக்காக 3 சகோதரிகள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்த நிலையில், அதனால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக நித்யஸ்ரீ என்ற மாணவி நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...