நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல், வேளாண் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நிகர்நிலை பல்கலைகளுக்கு தடை கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுயநிதி வேளாண் கல்லுாரிகள் சங்கத்தின் செயலர், டாக்டர் கே.பலராமன் தாக்கல் செய்த மனு:பல்கலை மானிய குழுவின் வழிமுறைகளின்படி, வேளாண் மற்றும் அதைச் சார்ந்த படிப்புகள் துவங்க, மாநில அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
தடையில்லா சான்று
தமிழகத்தில் இயங்கும், ஒன்பது நிகர்நிலை பல்கலைகளில், குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. வேளாண் வகுப்புகள் நடத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள, குறைந்தபட்ச நிலம் கூட, சில நிகர்நிலை பல்கலைகளில் இல்லை.வேளாண் மற்றும் அதைச் சார்ந்த படிப்புகள் துவங்க விரும்பும் நிகர்நிலை பல்கலைகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற பின், மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெற, தமிழக வேளாண் துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
நிகர்நிலை பல்கலைகள், அரசின் ஒப்புதல் பெற்றதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யவும் கூறிஉள்ளார்.எனவே, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வழிமுறைகளின்படி, மாநில அரசின் தடையில்லா சான்றிதழ், வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் இன்றி, நிகர்நிலை பல்கலைகள் எதுவும், மாணவர்களை சேர்க்க முடியாது.ஆனால், நிகர்நிலை பல்கலைகள், விண்ணப்பங்களை வழங்கி, மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கின்றன. இந்தச் செயல், வேளாண் துறை உத்தரவு, யு.ஜி.சி., வழிமுறைகளுக்கு எதிரானது.
தள்ளி வைப்பு
எனவே, நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல், வேளாண் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, நிகர்நிலை பல்கலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். யு.ஜி.சி., வழிமுறைகளையும், வேளாண் துறையின் உத்தரவையும் கண்டிப்புடன் பின்பற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், வழக்கறிஞர் சாதிக் ராஜா ஆஜராயினர். வேளாண் துறை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும், 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...