கல்லூரி
மாணவர்களுக்கான இணையவழி இறுதி தேர்வினை பழநியில் மாணவர்கள் குழுவாக
அமர்ந்து காப்பி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு
அறிவித்த செப்டம்பர் மாத கொரோனா ஊரடங்கு தளர்வில் பொது போக்குவரத்து உட்பட
பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. எனினும், பள்ளி, கல்லூரிகள்
செயல்படுவதில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. பள்ளிகளில் 10ம் வகுப்பு
தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அரசால் அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளில்
இந்தாண்டு இறுதியாண்டை தவிர, அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தனர்.
இளங்கலையில் 6வது செமஸ்டர், முதுகலையில் 4வது செமஸ்டர்களுக்கு மட்டும்
தேர்வுகள் இணையவழியில் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. தேர்விற்கான
கேள்வித்தாள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப், இமெயில் மூலம் அனுப்பப்படும்.
மாணவர்கள் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் முன்னிலையிலோ, பணிபுரிந்து கொண்டிருந்தால் அங்கேயே தனி இடத்தில் அமர்ந்து தேர்வினை எழுத வேண்டுமென்றும், தேர்வுத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் பெற்றோர் கையொப்பமிட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த விடைத்தாளை மாணவர்கள் 2 மணிக்குள் அந்தந்த கல்லூரியில் நேரில் அல்லது அருகில் உள்ள கல்லூரிகளிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அனுப்பலாமென அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த விசித்திரமான அறிவிப்பு மாணவர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த மாணவர்கள் அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட இடங்களில் ஒன்றாக அமர்ந்து புத்தகங்களை பார்த்தும், ஒருவரை ஒருவர் பார்த்தும் தேர்வுகளை எழுதினர். பெற்றோர் முன்னிலையில் பார்க்காமல் எழுத வேண்டிய தேர்வை அரசின் விநோத அறிவிப்பால் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பார்த்து எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...