++ இயல்புக்கு மாறான நீட் தேவையா? ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் ஒரு அடிப்படை தன்மை இருக்கும். அந்த பொருள் பல்வேறு வடிவங்களில் இருந்தாலும் அதன் அடிப்படை தன்மை மாறாமல் இருக்கும். 

உதாரணமாக சர்ககரை இனிப்பு. அது படிகமாக இருந்தாலும், தூளாக இருந்தாலும், பரலாக இருந்தாலும் அதனிடம் மாறாமல் இருக்கும் தன்மை இனிப்பு.  அது நிறம் மாறி நாட்டுச் சர்க்கரையானாலும் அதன் அடிப்படை தன்மையான இனிப்பு என்பது மாறாது.

பனிக்கட்டியின் அடிப்படைத் தன்மை குளிர்ச்சியை கொடுப்பது. அது ஐஸ் வடிவில் இருந்தாலும், ஐஸ் கட்டி வடிவில் இருந்தாலும்,பனிமழையாக பொழிந்தாலும் அதன் அடிப்படைத் தன்மை மாறாது. பனிக்கட்டியின் குளிர்ச்சி எதார்த்தம். ஆனால் சூடான பனிக்கட்டி அசத்தியம்.

நெருப்பின் அடிப்படை தன்மை வெப்பத்தை கொடுப்பது. மெழுகுவர்த்தி முதல் காட்டுத் தீ வரை எந்த வடிவில் இருந்தாலும் நெருப்பு வெப்பத்தை வெளிவிட்டுக் கொண்டு தான் இருக்கும்.

இப்படி ஒவ்வொரு பொருளை எடுத்துப்பார்த்தாலும் அதற்கு சில அடிப்படை தன்மை மாறாமல் இருக்கும். நாம் ஒவ்வொருவருடைய குணநலன்களும் நம் பெற்றோர், சமூகம் போன்ற பல காரணிகளைப் பொறுத்து அமைந்தாலும் சில அடிப்படை குணங்கள் நமக்கே உரியது. இந்த பொருள்கள் போலவே ஓவ்வொரு மனிதருக்குள்ளும் சில அடிப்படை தன்மைகள் மாறாமல் இருக்கும். அவைகளை மாற்ற முயற்சிக்கும் போது இயல்பாகவே பிரச்சனைகள் ஏற்படும்.

குளிர்ச்சியான நெருப்பையும், சூடான ஐஸ்கிரீமையும் நாம் உருவாக்க முயல்வது அதன் அடிப்படை தன்மையை மாற்ற முயற்சிக்கும் செயல். அப்படி முயற்சி செய்யும் போது தோல்விகள் ஏற்படுவது தான் இயல்பு. அந்த தோல்விகளில் அடிப்படையை புரிந்து கொள்ளாமலிருந்தால் மன அழுத்தம் அதிகமாகி அது தற்கொலை வரை நம்மை கொண்டு செல்ல நேரிடும்.

இப்படி இயல்புக்கு மாறாக முயற்சி செய்து அதனால் கிடைக்கும் தோல்வியில் துவண்டு கிடப்பது நிச்சயமாக நமது திறமையின்மை காரணமாகவோ அல்லது வலிமையின்மை காரணமாகவோ அல்ல. மாறாக இயல்புக்கு மாறாக நாம் மாற முயற்சிப்பதனால். நம்முடைய சில இயல்புகளை நம்மால் மாற்றிக்கொள்ள இயலாது. முயற்சிப்பதில் தவறில்லை. ஆனால் முயற்சிக்கும் போது கிடைக்கும் முடிவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2019 ஆம் ஆண்டு  7,79, 931 மாணவர்கள் +2 தேர்வை எதிர்கொண்டனர்.  தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற குழந்தைகள் 92.3% (7,19,876) மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள்.   கடந்த ஆண்டு நிலவரப்படி சுமார் 3,400 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன.  1, 23,078 மாணவர்கள்  நீட் தேர்வு எழுதினார்கள். அதாவது வெற்றி பெற்றவர்களில் 17.1% மாணவர்களே நீட் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வு எழுதியவர்களில்  59, 785 மாணவர்கள் ( 48.6%) தேர்ச்சி பெற்றிருந்தாலும் 3,400 மாணவர்களுக்கு (மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியல் இடம் கிடைத்தது. அதாவது + 2 தேர்வு எழுதியவர்களில் 0.43% மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்புக்கு செல்கின்றனர். மீதமுள்ள 99.57 % மாணவர்களும் வேறு பிரிவில் தான் மேற்படிப்புக்குச் செல்கின்றனர். இந்த வருடமும் சுமார் 8,00,000 மாணவர்கள் +2 தேர்வு எழுதினர். சென்ற வருட அதே நிலைமை தான் இந்த வருடமும் தொடர்கிறது.

நமது சமூகத்தில் மருத்துவர் என்பது மதிப்பு மிகுந்த தொழில். சிலருக்கு கனவு. சிலருக்கு தந்தையின் பணியினை தொடர்வது, சிலருக்கு கெளரவம் என எதோ ஒரு தேடல் ஒருவரை மருத்துவ கனவுக்குள் அவர்களை கொண்டு செல்கிறது. கனவு நிஜமானால் மகிழ்ச்சி. அதே கனவு நிஜமாவே பகல் கனவாகிப் போகும் போது நிஜங்களை தாங்கிக் கொள்ள சக்தியில்லாமல் பலர் நிஜ வாழ்க்கையில் தோல்வி அடைகின்றனர். 

தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்க பழக்கப்படுத்தாமல் இந்த குழந்தைகள் வளர்க்கப்படுவதால் தான் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள். கனவு காண்பது நல்லது. கனவுகளை நோக்கிச் ச்செல்ல போராடுவது நல்லது. ஆனால் நமது கனவுகளை அடைய முடியவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ளவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

+2 தேர்வு எழுதுபவர்களில் வெறும் 0.43% மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்புக்குச் செல்கிறார்கள். மீதமுள்ள 99.57 % மாணவர்களும் வேறு துறைகளில் தான் மேற்படிப்புக்குச் செல்கிறார்கள். அவர்கள் எல்லாம் வெற்றி பெறவில்லையா? அவர்கள் எல்லாம் கெளரவமாக இல்லையா ?

0.43%  மாணவர்களில் ஒருவராக முயற்சி செய்யுங்கள். அப்படி வந்து விட்டீர்கள் என்றால் மகிழ்ச்சி. இல்லையென்றால் மீதமிருக்கும் 99.57 % மாணவர்களில் முதல்வராக வரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குங்கள். உங்கள் சிந்தனை உங்களுக்கு வழிகாட்டும். நீங்கள் எந்த டிகிரி முடித்தாலும் IAS தேர்வு எழுதி வெற்றி பெற்றால் நீங்கள் கனவு கண்ட மருத்துவரை வழிநடத்தும் மாவட்ட ஆட்சியாளராக வாய்ப்பிருக்கிறது.

உங்கள் இயல்புகளை மாற்றாமல் அதே முயற்சியை தொடர்ந்தீர்கள் என்றால் நிச்சயம் மீண்டும் வெற்றி பெறமுடியும். வடிவங்கள் எதுவாகினும் சர்க்கரையின் தன்மை இனிப்பை வழங்குவது தான். பனிக்கட்டியின் தன்மை குளிர்ச்சியை தருவது தான். 

உங்கள் அடிப்படை தன்மையை மாற்றாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். மருத்துவர், ஆட்சியர், ஆசிரியர், பொறியாளர், கலைஞர், மேலாளர், காசாளர், வரைவாளர் என எந்த வடிவில் இருந்தாலும் நல்ல மனிதர் என்ற தன்மை உங்களிடம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த தன்மை வெளிப்பட்டுக்கொண்டு இருக்கும் வரை வாழ்க்கை அழகானதாகவே இருக்கும்.

- Mr. Bergin

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...