தீயவர்களின் நட்பு
ஒரு கிணற்றில் வயதானத் தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தது. மற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயதான தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப்புற்று அதன் கண்ணில்ப்பட்டது.
நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன? என்கிற எண்ணம் வந்தது. மெதுவாகப் பாம்புப்புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது. உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்?என்று கேட்டது அந்த பாம்பு.
அதற்கு அந்த வயதானத் தவளை, என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன் என்றது.
என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்? நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன் என்றது தவளை. பாம்பும் யோசித்தது. நாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இப்படி தானாக வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.
கிணற்றுக்குள் சென்ற பாம்பும், அந்த வயதானத் தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் அழித்தது. கிணற்றுக்குள் இருந்த வயதான தவளையும் மகிழ்ச்சியுற்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.
பாம்பு வயதான தவளையைப் பார்த்து, உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டதால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டது. வயதானத் தவளையோ, நண்பரே! நீங்கள் எனக்கு உதவிதற்கு மிக்க நன்றி. எனக்கு இனிமேல் உங்களின் உதவி தேவையில்லை என்றது.
ஆனால் பாம்போ கோபத்துடன், உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன் என்று அச்சுறுத்தியது.
வயதானத் தவளையும் பயந்து, தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அந்த வயதான தவளையின் மகனையும் சாப்பிட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற வயதானத் தவளையின் மனைவி, நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாம் இருவர் மட்டும்தான் மீதம் இருக்கிறோம். நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாம் இருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம் என்று எச்சரித்தது.
அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் ஏதாவது கொடு என்று கேட்டது. உடனே வயதானத் தவளை, நண்பரே! நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன் என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.
சில நிமிடங்கள் கழிந்த பின்பு, நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய்? நான் வேகமாகச் சென்று தவளைகளை அழைத்து வருகிறேன் என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது. தன் பசிக்கு உணவு கொண்டு வரச்சென்ற வயதானத் தவளையும், அதனுடைய மனைவியும் திரும்ப வரவேயில்லை. பாம்பு ஏமாற்றமடைந்தது.
கிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, பல்லியாரே, அந்தக் வயதானத் தவளைக்கு நீங்களும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச்சொல் என்று தகவல் சொல்லி அனுப்பியது.
பல்லியும் அந்த வயதானத் தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது. அதற்கு அந்த வயதானத் தவளை பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன் என்று சொல்லி அனுப்பியது.
நீதி :
நட்பு நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...