NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகளின் பள்ளி சேர்க்கைக்கான வயது மாற்றம் குறித்த தலையங்கம்!


ஒன்றாம் வகுப்பில் குழந்தையைச் சேர்ப்பதற்கான வயது இப்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. உதாரணத்துக்கு, தமிழகம், புதுதில்லி, ராஜஸ்தான், ஒடிஸô, ஆந்திர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஐந்து வயது நிறைவடைந்தவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாணவர் சேர்க்கைக்கான வயது ஆறாக உள்ளது. கர்நாடகம், கோவா போன்ற மாநிலங்களில் 5 வயது 10 மாதம் நிறைவடைந்தவர்கள் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.


அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் ஆறு வயது நிறைவடைந்தவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதற்கு முன் சேர்ப்பதனால், குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதுடன், உளவியல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



குழந்தைகளை சீக்கிரமாக பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம் அவர்களது பணிக்காலத்தை நீட்டிக்க முடியும் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆறு வயது நிறைவடைந்தவர்கள்தான் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பெற்றோர்களில் சிலர் உச்சநீதிமன்றத்தை நாடினர்.



"குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இரண்டு வயதிலேயே தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். இதனால் மனரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும்' என்று இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெüல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது. பின்னர், அந்த அமர்வு இந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.



நகரமயமாக்கல் காரணமாக கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நகரமயமாக்கல் பெரும் பாய்ச்சல் எடுக்கும் வரை, புற்றீசல்போல தனியார் பள்ளிகள் பகுதிக்குப் பகுதி முளைக்காத வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது ஆறு வயதாகத்தான் இருந்தது. அப்போதெல்லாம் பிறப்புச் சான்று என்பது அதிகம் புழக்கத்தில் இல்லை. பள்ளிகளில் சேர்க்கைக்கு பிறப்புச் சான்று கட்டாயம் என்பதும் இல்லை. 



அதனால், ஆறு வயதாக இரண்டு-மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தால் ஆறு வயதாகிவிட்டது என்று கூறி தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் பள்ளிகளில் சேர்த்துவிடுவார்கள்.



காலப்போக்கில் வாழ்க்கை வசதிக்காக கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனிக்குடித்தனம் செல்லும் மனநிலை காரணமாக தம்பதிகள் தனியாக வசிக்கத் தொடங்கினர். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆள்கள் இல்லாததால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதுபோல, இரண்டு வயதிலேயே குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போக்கு அதிகரித்தது.



இதனால் சிறு வயதிலேயே பள்ளி, சிறிது காலம் ஆன பின்பு படிப்பில் போட்டி, அதன் பின்னர் வேலை, வேலை பளு, திருமணம் என அடுத்தடுத்து பரபரப்பான வாழ்க்கையாக நகர (நரக) வாழ்க்கை ஆகிவிட்டது. குழந்தைப் பருவத்திற்கேயுரிய மகிழ்ச்சி என்பது கானல் நீராகிவிட்டது. இப்போது நடைமுறையில் உள்ள 10 + 2 என்பதில் எத்தனை வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.



இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் 5+3+3+2 என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 5 ஆண்டுகளில் முதல் மூன்று ஆண்டுகள் மழலையர் கல்வி என கூறப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு என நான்கு கட்ட தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்க உள்ளது. அதில் முதல் பாடத்திட்ட கட்டமைப்பை 2022 அக்டோபரில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.



முதல் மூன்று ஆண்டுகள் குழந்தைகளுக்கு அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் கற்பிப்பதற்காக 13 மொழிகளில் "ஜாதுய் பிடாரா' (மேஜிக் பாக்ஸ் - மந்திரப் பெட்டி) என்ற கற்றல் உபகரணத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 20) அறிமுகப்படுத்தி உள்ளார்.



இதில் விளையாட்டுகள் அடங்கிய புத்தகம், புதிர்கள், பொம்மைகள், பொம்மலாட்டம், குழந்தைகளுக்கான கதைகள் அடங்கிய புத்தகம், ஆசிரியர்களுக்கு கையேடு உள்ளிட்ட பலவும் இடம்பெற்றுள்ளன.



அத்துடன் குழந்தைகளின் அடிப்படைக் கல்விக்கு தகுதிவாய்ந்த உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை என்பதால், இதற்கென இரண்டு ஆண்டு பட்டயப் படிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டயப் படிப்பு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (எஸ்சிஇஆர்டி) வடிவமைக்கப்பட்டு, அதன் கண்காணிப்பின் கீழ் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படும்.



மாறிவிட்ட சூழலில், குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளிக்கு அனுப்புவது என்பது தவிர்க்க இயலாததாகிவிட்டது. இந்த நிலையில், அவர்களுக்கு கற்றல் என்பது இனிய அனுபவமாக இருக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கத்தக்கதாகும். இதுபோன்ற திட்டங்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் சாத்தியப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive