கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கிறார்கள். கடந்த கல்வியாண்டில் இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த 13 வயது மாணவிக்கு அங்கு பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் உள்பட சில ஆசிரியர்களிடம் அந்த மாணவி புகார் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே இந்த சம்பவம் குறித்து மாணவி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சில ஆசிரியர்கள் பெயரையும் போலீசார் சேர்த்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ஆனந்தகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் மத்வராயபுரம் அரசு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதுபோன்று 10 ஆசிரியர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் மத்வராயபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெற இருந்தார். இந்தநிலையில் நேற்று அவரை பணியிடை நீக்கம் செய்து சென்னையில் இருந்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவு நகல் தலைமை ஆசிரியைக்கு வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...