பள்ளி மாணவர்களின் சீருடைகளை, பெற்றோரே தைத்துக்கொள்ள அனுமதிக்கும்படி, தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என, தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் மாநில பொதுச்செயலர் வீரசங்கர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ரெடிமேட் ஆடைகள் அதிகரித்துள்ளதால், தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில், தையல் வேலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளி துவங்கும் காலங்களில், சீருடை தைக்கும் வேலை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருக்கும்.
தற்போது பள்ளி நிர்வாகங்கள், தனி நபரிடம் கொடுத்து, சீருடைகளை தைத்து வாங்கிக் கொள்கின்றன. தமிழகத்தில், 15,000க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 79 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்களின் பெற்றோர், அவர்கள் விருப்பத்திற்கேற்ப, சீருடைகளை தைத்துக் கொள்ளலாம் என, பள்ளி நிர்வாகம் கூறினால், தமிழகத்தில் உள்ள 40 லட்சம் தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும்.
எனவே, வரும் கல்வி ஆண்டில் இருந்து, பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம், நீங்களே சீருடை எடுத்து தைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும். தையல் கலையை மேலும் வளர்க்க, ஆறாம் வகுப்பில் இருந்து தையல் பயிற்சியை கட்டாய பாடமாக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...