இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏழை மாணவர்கள் அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வரின் ஆணையின்படி இந்த ஆண்டு புதிதாக 15 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அக்கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இக்கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க 574 கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்த முதல்வர் ஆணையிட்டுள்ளார். கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை உரிய கல்வித்தகுதி உடையவர்களை கொண்டு வெளிப்படைத் தன்மையயுடன் நிரப்ப கல்லூரி கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கவுரவ விரிவுரையாளர் பதவிக்கு www.tngasa.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 34 பாடப்பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 574 பணியிடங்களின் விவரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. உரிய தகுதியுடையவர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்தி ஆக.4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின் நெறிமுறைகளை பின்பற்றியும் கல்வித்தகுதி, நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணிநியமனத்துக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை சென்னை ராணி மேரி கல்லூரியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தொடங்கிவைத்தார். அப்போது கல்லூரி கல்வி ஆணையர் ஏ.சுந்தரவல்லி, ராணிமேரி கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...