விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் S.R அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிற்பகல் குடிபோதையில் பள்ளிக்கு வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை அப்பள்ளியின் அரசியல் அறிவியல் பாட ஆசிரியர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள்,தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்ல முயன்ற போது .. நான்கு மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் தலையில் தாக்கியதில் ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்கள் படுகாயம் அடைந்துள்ளார் என்ற செய்தி மிக மிகக் கண்டனத்துக்கு உரியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கெனவே.. அப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் தலையில் அரிவாளால் வெட்டி அவர் மயிரிழையில் உயிர் பிழைத்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில்.. மீண்டும் அப்பள்ளியின் நெறிபிறழ் நடத்தை கொண்ட மாணவர்களால் இந்தச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதைக் கண்டு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மீது . . அதுவும் ஒரே பள்ளியில் பணியாற்றிய முதுகலை ஆசிரியர்கள் மீது இரண்டாம் முறையாகக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய நெறிபிறழ் நடத்தை கொண்ட மாணவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
பணிப்பாதுகாப்புச் சட்டம் வேண்டும் என்று தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும் நாம் எழுப்புகின்ற குரல் அரசின் செவியை இன்னும் எட்டாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
இத்தகைய போக்குகளைக் கண்டும் காணாமலும் விட்டு விட்டு.. அரசுப் பள்ளிகள் மீது அச்சத்தை ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளை அழிக்கும் நோக்குடன் அரசு செயல்படுகிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
சமூகத்தின் புரையோடிய புற்றுநோயாக உருவெடுத்து வரும் இதுபோன்ற நெறிபிறழ் நடத்தை கொண்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில அமைப்பின் சார்பில் தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியருக்கு இவ்விடயத்தில் அனைத்து ஆசிரியர்களும் உறுதுணையாக நிற்போம் என்பதையும்.. இப்பிரச்சினைக்குச் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் உடனடியாகப் போராட்டத்தில் இறங்குவோம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்..
மாநில அமைப்பின் சார்பில்..
பெ. முத்தையா
மாநில அமைப்புச் செயலாளர்
TNPGTA.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...